கோலாலம்பூர், மார்ச் 26: நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் தலைநகர் நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் 27 முதல் 29-ஆம் தேதி வரையிலான உச்சக்கட்ட நாட்களில் பிளஸ் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 20 முதல் 23 லட்சம் வாகனங்கள் வரை நெடுஞ்சாலையைப் பயன்படுத்தக்கூடும் என பிளஸ் மலேசியா நிறுவனம் (PLUS) கணித்துள்ளது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியை நோக்கி வரும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நெரிசலைக் குறைக்கவும், சீரான பயணத்தை உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு பிளஸ் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இதற்காக 'MyPLUS-TTA' எனும் மின்னிலக்கப் பயண அட்டவணையை பிளஸ் செயலி வாயிலாகப் பொதுமக்கள் அணுகலாம். இந்த அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நேரத்தைப் பின்பற்றிப் பயணிப்பதன் மூலம், முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியும் என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலையின் 34 முக்கிய இடங்களில் 'ஸ்மார்ட் லேன்' (Smart Lane) வழித்தடங்களை பிளஸ் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
அத்துடன், பயணிகளுக்குத் தேவைப்படும் அவசர உதவிகளை வழங்குவதற்காக பிளஸ் ரோண்டா (PLUSRonda) குழுவினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், R&R இடங்களிலும், வழிநிறுத்தங்களிலும் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கத் தேவையான கூடுதல் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், டோல் சாவடிகளில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகள் தங்களின் 'டச் என் கோ' (Touch 'n Go) அட்டைகள் மற்றும் இ-வாலட் (eWallet) ஆகியவற்றில் போதிய மபணம் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போதைய போக்குவரத்து நிலவரங்களைப் பிளஸ் செயலி, சமூக ஊடகப் பக்கங்களான X @plustrafik மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மின்னணு தகவல் பலகைகள் வாயிலாக உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்றும் பிளஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.







