கெடாவில் இரு கடத்தல்காரர்கள் சுட்டுக் கொலை: பிணைக் கைதிகள் மீட்பு

8 ஆகஸ்ட் 2026, 1:54 AM
கெடாவில் இரு கடத்தல்காரர்கள் சுட்டுக் கொலை: பிணைக் கைதிகள் மீட்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: கெடா, அலோர் ஸ்டார், தெலகா பாத்தா, தாமான் அமீராவில் உள்ள ஒரு வீட்டில், கடத்தப்பட்ட இருவரை மீட்கும் நடவடிக்கையின் போது, போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இரவு 8.40 மணியளவில் புக்கிட் அமான் JSJ -குற்றப் புலனாய்வுத் துறையின் D9 சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிரடிப் படையினர் மீது சந்தேக நபர்கள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக JSJ இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

"பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கும் வரை தற்காப்புக்காக அதிரடிப் படையினர் திருப்பிச் சுட்டனர். நேற்று இரவு 9.30 மணியளவில் இரு சந்தேக நபர்களும் இறந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர், மேலும் அவர்களிடமிருந்து எந்தவோர் அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட இரு பாதிக்கப்பட்டவர்களும் 70 மற்றும் 30 வயதுடைய வெளிநாட்டு ஆணும் பெண்ணும் ஆவர். அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இரு குற்றவாளிகளுக்கு அருகில் ஐந்து தோட்டாக்களைக் கொண்ட பெரெட்டா (Beretta) ரக அரை-தானியங்கி கைத்துப்பாக்கி, நான்கு தோட்டாக்களைக் கொண்ட ஒரு ரிவோல்வர் மற்றும் ஒரு நீள அரிவாள் ஆகியவற்றை போலீசார் கண்டெடுத்ததாக டத்தோ குமார் கூறினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பல தனித்தனி சோதனைகள் நடத்தப்பட்டு, கெடா, பினாங்கு மற்றும் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஒரு உள்ளூர் ஆடவர், நான்கு வெளிநாட்டு ஆடவர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

"இந்தச் சம்பவம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு ஆகஸ்ட் 10 -ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுமெனவும் டத்தோ குமார் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.