சீக், ஜூன் 29 - கெடாவின் சீக் மாவட்டத்தில், தங்களின் வீட்டிற்கு அருகிலிருந்து பறிக்கப்பட்ட நச்சுக்காளானைச் சமைத்துச் சாப்பிட்ட தம்பதியினர் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உயிர் தப்பியுள்ளனர்.
28 வயதுடைய அந்தத் தம்பதியினர் நேற்று சீக் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில், தற்பொழுது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளானைச் சமைப்பதற்கு முன்பாக, மனைவி இந்தான் நபிலா தனது தாயார் மற்றும் மைத்துனரைத் தொடர்பு கொண்டு அந்த காளான் சாப்பிடக்கூடியதுதானா என்று கேட்டு உறுதிப்படுத்த முயன்றதாகத் தெரிகிறது.
எனினும், அவர்கள் அந்தக் காளானை தவறாக அடையாளம் கண்டு, அது சாப்பிடத் தகுந்தது என்று கூறியதால் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
மேலும், சமைப்பதற்கு முன்பாக நேற்று காலை 10.30 மணியளவில் இந்தான் நபிலா அந்த காளான் குறித்தப் புகைப்படத்தைத் தனது வாட்ஸ்அப் (WhatsApp) பதிவிலும் பதிவேற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.







