ஷா ஆலம், ஏப்ரல் 8 – டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கும் பொருட்டு, தகுதியுள்ள பயனாளர்களுக்கு 300 ரிங்கிட் 'பூடி மடாணி' (BUDI MADANI) டீசல் உதவித்தொகையை அரசாங்கம் இன்று முதல் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிதியுதவி குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், டீசல் விலை மாற்றத்தால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, தற்போது வழங்கப்பட்டு வரும் 300 ரிங்கிட் உதவித்தொகையில், தற்போதையச் சூழலை மக்கள் சமாளிப்பதற்காக 100 ரிங்கிட் இடைக்காலக் கூடுதல் நிதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் இன்னும் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், மலேசிய அரசாங்கம் நேரடி நிதியுதவி வழங்குவதன் மூலம் தனது குடிமக்களைப் பாதுகாக்க முன்னுரிமை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த 100 ரிங்கிட் கூடுதல் நிதியுதவியானது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், உலகளாவிய எரிசக்தி சந்தையின் மாற்றம் மற்றும் நாட்டின் நிதி நிலையைப் பொறுத்து இது ஒவ்வொரு மாதமும் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
டீசல் எரிபொருள் செலவினங்களால் பாதிக்கப்படக்கூடிய நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து நிதி ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதே 'பூடி மடாணி' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அல்லது கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








