ஜோர்ஜ்டவுன், டிச 23- பினாங்கு அரசாங்கம் 2026ஆம் ஆண்டுக்கான நில வரி தள்ளுபடி விகிதத்தை, முன்பு இருந்த 32.5 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இது நில உரிமையாளர்களின் நிதிச்சுமையைக் குறைப்பதோடு, புதிய நில வரி விகிதங்களுக்கு படிப்படியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மாற்றத்தை உறுதி செய்யும்.
எனினும், நில வரி தள்ளுபடியானது சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நில வரி விகிதத்திற்கு உட்பட்டது என்றும், திருத்தப்பட்ட விகிதங்கள் தேசிய நிலச் சட்டம் (சட்டம் 828) இணங்க குறைந்தது 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் முதலமைச்சர் சௌ கொன் யாவ் தெரிவித்தார்.
"இதன்படி, தள்ளுபடிக்குப் பிறகு நில வரித் தொகை முந்தைய ஆண்டில் செலுத்தப்பட்ட தொகையை விடக் குறைவாக இருந்தால், தற்போதுள்ள நில வரித் தொகையே பொருந்தும்.
"இந்த அணுகுமுறை நில உரிமையாளர்களின் நலன்களுக்கும் மாநிலத்தின் வருவாய் தேவைகளுக்கும் இடையில் சமநிலையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது," என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நில வரி குறைப்புகள், நிலுவைகள் மற்றும் தாமதக் கட்டண அபராதங்கள் தொடர்பான மேல்முறையீடுகளை சில குறிப்பிட்ட வழக்குகளில் நில அலுவலகங்களில் உள்ள மேல்முறையீட்டு வழிமுறை மூலம் அனுமதிக்க மாநில ஆட்சிக்குழு ஒப்புக்கொண்டதாகவும் சௌ தெரிவித்தார்.
தற்போதைய நிலப் பயன்பாடு காரணமாக விகித மாற்றங்களால் பாதிக்கப்பட்ட முதல் தர நில உரிமையாளர்கள், அத்துடன் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறமாக நிலத்தை மறுவகைப்படுத்தும் செயல்பாட்டில் உள்ளவர்கள் ஆகியோருக்கான மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அனைத்து மேல்முறையீடுகளும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்றும், புதிய விகிதங்களால் கணிசமாகப் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உதவுவதே இந்த வழிமுறையின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நில வரி ரசீதுகள் ஜனவரி நடுப்பகுதியில் அனைத்து நில உரிமையாளர்களுக்கும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும், ஆனால் நில உரிமையாளர்கள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தங்கள் நில வரி ரசீதுகளை இணையம் வாயிலாக சரிபார்த்து செலுத்தலாம் என்றும் சௌ கூறினார்.


