இந்தியர்களின் சமூக நலன் இனி எனது நேரடி கண்காணிப்பில்: பிரதமர் அன்வார்

30 ஜூலை 2026, 2:35 AM
இந்தியர்களின் சமூக நலன் இனி எனது நேரடி கண்காணிப்பில்: பிரதமர் அன்வார்
இந்தியர்களின் சமூக நலன் இனி எனது நேரடி கண்காணிப்பில்: பிரதமர் அன்வார்
இந்தியர்களின் சமூக நலன் இனி எனது நேரடி கண்காணிப்பில்: பிரதமர் அன்வார்

சிரம்பான், ஜூலை 30 : இனிமேல் இந்திய சமூகம் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்கும் பொறுப்புகளைத் தாம் நேரடியாக கண்காணிக்கப் போவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்திய சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து தாம் அந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள மித்ரா மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவை மேற்பார்வையிடும் மனிதவள அமைச்சர் ஆர். ரமணன், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடமைகளையும் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவார் என்று அவர் கூறினார்.

“நான் ரமணனை (இந்திய சமூகத்தின் பிரச்சினைகளைக் கண்காணிக்க) உதவுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இனிமேல், மித்ரா மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் நானே பொறுப்பு. நான் அவற்றுக்கு நேரடியாகப் பொறுப்பேற்கிறேன்,” என்று நேற்றிரவு இந்திய சமூகத்துடனான இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது பிரதமர் அவ்வாறு கூறினார்.

தெக்குன் நேஷனல் (Tekun Nasional), அமானா இக்தியார் மலேசியா (AIM), நிதி உத்தரவாதத் திட்டங்கள், அத்துடன் இதர பொருளாதார மேம்பாட்டு நலத்திட்டங்கள் மூலமான நிதி உதவி உட்பட, இந்தியச் சமூகம் சார்ந்த கொள்கை ஒருங்கிணைப்பை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும் என்றும் அன்வார் கூறினார்.

இதனிடையே, குறிப்பிட்ட சில தரப்பினரின் கருத்துகள் அல்லது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்லாமல், ஒற்றுமை அரசாங்கத்தின் சாதனைப் பதிவுகளையும், செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் அடிப்படையிலும் இந்தியச் சமூகம், அரசாங்கத்தை மதிப்பிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, வழிபாட்டுத் தலங்கள் குறித்து விவாதிக்கும் போது ' அங்கீகரிக்கப்படாத கோயில்' (kuil haram) என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காகவும் அன்வார் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

மேலும் தனது தவற்றை உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.

“நான் பிரதமராக பதவியேற்றது முதல், ஒரு பழைய கோயில் கூட இடிக்கப்படவில்லை. அதுபோன்ற ஒன்று நடக்கவில்லை. விதிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன,” என்று அவர் கூறினார்.

“எனவே, நான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால், அதாவது இது 'அங்கீகரிக்கப்படாத கோயில்' என்று சொல்லியிருந்தால், நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தத் தவற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்.” என பிரதமர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.