ஷா ஆலாம், ஜூலை 18: யூனிசெல் பல்கலைக்கழகத்தின் (UNISEL) ஷா ஆலாம் மற்றும் பெஸ்தாரி ஜெயா கிளைகளைச் சேர்ந்த 153 இந்திய மாணவர்கள், தங்களின் டிஜிட்டல் கல்வித் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு (MITRA) எனப்படும் மித்ரா அமைப்பின் மூலமாக மடிக்கணினி உதவிகளைப் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், குறிப்பாக அவர்களுக்குரிய கல்வி வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதிலும் பல்கலைக்கழகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த உதவி பிரதிபலிக்கிறது என்று யுனிசெல் நிறுவனத்தின் கார்ப்பரேட் தொடர்புத் துறை இயக்குனர் ஹஸ்ரில் அபு ஹசான் தெரிவித்தார்.
இந்த மித்ரா அமைப்பின் பங்களிப்பாகும் என்றும், தேசிய கல்வி அறவாரியம் (Yayasan Didik Negara) மற்றும் யுனிசெல் ஆகியவை இணைந்து இந்த விநியோகச் செயல்முறையை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, அவர்களின் கல்வித் தகுதியை மேம்படுத்தவும், கற்றல் அனுபவத்தை வலுப்படுத்தவும் பெரிதும் உதவும்.
மித்ரா, தேசிய கல்வி அறவாரியம் மற்றும் யுனிசெல் ஆகிய தரப்புகளுக்கு இடையிலான இந்த கூட்டுழைப்பானது, கல்வித் திட்டத்தை வலுப்படுத்துவதோடு, தகுதியுடைய மாணவர்களுக்குச் சீரான முறையில் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் ஹஸ்ரில் மேலும் கூறினார்.
இத்தகைய சிறந்த ஒத்துழைப்பின் மூலம், மடிக்கணினி விநியோகம் திட்டமிட்டப்படியும் சுமுகமாகவும் நடத்தப்பட்ட வேளையில், தகுதியான எந்தவொரு மாணவரும் தரமான கல்வி வசதிகளைப் பெறுவதிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.







