ஷா ஆலம், ஏப்ரல் 6 – கழிவு மேலாண்மைச் செலவினங்களைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மறுசுழற்சி செயல்பாடுகளை வலுப்படுத்த அரசு முகமைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநில உள்ளாட்சி மற்றும் சுற்றுலாத் துறைக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறுகையில், மறுசுழற்சி துறையில் சிறந்த நிபுணத்துவம் பெற்றுள்ள உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இத்தகைய முயற்சியின் மூலம் உருவாக்கப்படும் கழிவுகளின் அளவைக் குறைக்க முடியும் என்றும், அதன் வாயிலாக கழிவு சேகரிப்புக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க வழிவகை ஏற்படும் என்றும் அவர் விளக்கமளித்தார். ஏற்கனவே நெஸ்லே (Nestlé) போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புத் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கழிவுகளின் அளவு ஆண்டுதோறும் அதிகரிப்பதைத் தடுத்து, அதை முறையாகக் கையாள்வதே அரசின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு முதல் சுற்றுச்சூழல் குழுவுடன் இணைந்து ஊராட்சி மன்றங்களிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கழிவுகளைத் தொடர்ந்து அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் நிர்வாகச் செலவைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், கூடுதல் வருவாயையும் ஈட்ட முடியும் என்று டத்தோ இங் சுய் லிம் வலியுறுத்தினார்.
இதன் ஒரு பகுதியாகப், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சிறப்புப் பாடநெறிகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிலாங்கூர் அரசு தனது கழிவு மேலாண்மை நிறுவனமான KDEB ஊடாக நெஸ்லே மலேசியாவுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று மறுசுழற்சி பொருட்களைச் சேகரிக்கும் திட்டத்தை முறையாகத் தொடங்கியது.
'SelKitar' எனும் பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மலேசியாவிலேயே மிகப்பெரிய தன்னார்வ மறுசுழற்சி முயற்சியாகும். தற்போது ஆறு முக்கிய நகரங்களில் சுமார் 200,000 வீடுகளை உள்ளடக்கி இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








