ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கரும்பருந்து; காப்பாரில் பறிமுதல்

21 ஜூலை 2026, 8:39 AM
ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கரும்பருந்து; காப்பாரில் பறிமுதல்

கோலாலம்பூர், ஜூலை 21 — காப்பார், தாமான் சுங்கை காப்பார் இண்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய கரும்பருந்து (Black-winged Kite / Elanus caeruleus) என்ற வேட்டையாடும் பறவையைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்பறவை, உரிமம் இன்றி வளர்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அரச மலேசிய போலீஸ் படை, மத்திய சேமப் படையின் (FRU) உளவுப் பிரிவு மற்றும் சிலாங்கூர் வனவிலங்கு - தேசிய பூங்கா துறை (Perhilitan) இணைந்து மேற்கொண்ட 'ஒப் பெர்செபாடு கசானா' (Op Bersepadu Khazanah) கூட்டு நடவடிக்கையின் போது அந்த வனவிலங்கு பறிமுதல் செய்யப்பட்டது.

இரவு 9.40 மணியளவில் ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட அந்த சோதனையின் போது 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக FRU தளபதி எஸ்.ஏ.சி ரோஸ்லி முகமட் யுசோஃப் தெரிவித்தார்.

"சோதனையின் போது, வனவிலங்கை சொந்தமாக வைத்திருக்கவோ, வளர்க்கவோ அல்லது பாதுகாப்பகத்தில் வைக்கவோ தேவையான எந்தவோர் அங்கீகார ஆவணங்களையும் கைதான நபரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

"இந்த வகை கரும்பருந்துகள் பறிமுதல் செய்யப்படுவது, நாட்டில் வனவிலங்கு அமலாக்க நடவடிக்கைகளில் பதிவான மிக அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும்," என்று அவர் இன்று FRU இன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், இதுவே இவ்வகையான முதல் பறிமுதலா என்பதை பெர்ஹிலிட்டானின் (Perhilitan) அதிகாரப்பூர்வ பதிவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ரோஸ்லி மேலும் கூறினார்.

இந்த சம்பவம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010- இன் பிரிவு 68-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிலாங்கூர் பெர்ஹிலிட்டான் விசாரணையை நிறைவு செய்யும் வரை கைதான நபர் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கரும்பருந்து என்பது அசிபிட்ரிடே (Accipitridae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேட்டையாடும் பறவையாகும். இது ஆப்பிரிக்கா, வெப்பமண்டல ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பரவலாக வாழ்கிறது என்று அவர் கூறினார்.

"இப்பறவை அதன் வெள்ளை மற்றும் சாம்பல் நிற உடல், இறக்கைகளில் உள்ள கருப்பு அடையாளங்கள் மற்றும் சிவப்பு நிற கண்கள் மூலம் எளிதில் அடையாளம் காணக்கூடியது.

இது பொதுவாக திறந்தவெளிப் பகுதிகளில் வாழும்; முக்கியமாக எலிகள் போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடும்," என்று ரோஸ்லி கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.