சட்டவிரோதமாக 6 டன் சமையல் எண்ணெய் பதுக்கல்: 6 பேர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

17 ஜூலை 2026, 6:55 AM
சட்டவிரோதமாக 6 டன் சமையல் எண்ணெய் பதுக்கல்: 6 பேர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஷா ஆலாம், ஜூலை 17 : உரிய உரிமம் இன்றி மொத்தம் 6,443 கிலோகிராம் உதவித் தொகை பெற்ற சமையல் எண்ணெயை கைவசம் வைத்திருந்ததாக மலேசியர் ஒருவர் உட்பட ஆறு ஆடவர்கள் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

லாரி ஓட்டுநரான 50 வயது மூ டெக் லிம் (Moo Teck Lim), நீதிபதி ஃபாத்திமா ஜஹாரி ( Fatimah Zahari) முன்னிலையில் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசித்துக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, தனது குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த 21 முதல் 36 வயதுக்குட்பட்ட இதர நான்கு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி மீண்டும் வாசித்துக்காட்டப்படும். அவர்களுக்கு மலாய் மொழி புரியாததால், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்படுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குற்றச்சாட்டின்படி, மூ டெக் லிம் மற்றும் அந்த நான்கு வெளிநாட்டினரும் கடந்த ஜூலை 14-ஆம் தேதி மதியம் 3:30 மணியளவில், பண்டார் பிங்கிரான் சுபாங், ஜாலான் அப்பல்லோவில் உள்ள ஒரு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் 4,845 கிலோகிராம் சமையல் எண்ணெயை வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

அவர்கள் மீது 1974-ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டு விதிகளின் விதி 3(1)-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது 1961 -ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 22(1), அதே சட்டத்தின் பிரிவு 21 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 ஆகியவற்றுடன் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 லட்சம் ரிங்கிட் வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் முன்னிலையாகவில்லை.

நீதிமன்றம் மூ-வுக்கு உத்தரவாளர் ஒருவருடன் 15,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் ஜாமின் அனுமதித்தது.

இதனிடையே, ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் மியன்மார் மொழிபெயர்ப்பாளர் முன்னிலையாவதற்கும் இந்த வழக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மற்றொரு தனி விசாரணை நடவடிக்கையில், இந்திய நாட்டவரான 49 வயது செந்தில் வடிவேல், அதே நாளில் மாலை 5:40 மணியளவில் ஜாலான் பக்தி 25/15 இல் உள்ள ஒரு வளாகத்தில் உரிமம் இன்றி 1,598 கிலோகிராம் சமையல் எண்ணெயை வைத்திருந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

அவர் மீதும் 1961 ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அதே பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

செந்தில் வடிவேல் சார்பாக வழக்கறிஞர் மார்க் ஜெயக்குமார் மைக்கேல் ஆஜராகிய வேளை நீதிபதி ஃபாத்திமா, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரு உள்ளூர் உத்தரவாளர்களுடன் 40,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையை அனுமதிக்க ஒப்புதல் அளித்தார்.

ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், ரசாயன அறிக்கையைப் பெறுவதற்கும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக நீதிமன்றம் ஆகஸ்ட் 24 ஆம் தேதியைக் குறித்தது. — பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.