ஈப்போ, ஜன 12: பேராக் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹிலிதான்) மேற்கொண்ட விசாரணையில், தஞ்சோங் மாலிம், புரோட்டோன் சிட்டி குடியிருப்பு பகுதியில் புலி இருப்பதற்கான எந்த தடயமும் கண்டறியப்படவில்லை.
அந்த பகுதியில் புலி உறுமிய சத்தம் கேட்கப்பட்டதாகக் கூறி பரவிய வீடியோ பதிவைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பணியாளர்களின் அறிக்கையின்படி, அந்த வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று தெரியவந்துள்ளதாகப் பேராக் பெர்ஹிலிதான் இயக்குநர் யூசோஃப் ஷரிப் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக வனவிலங்குகள் இருப்பதாக பொய்யான வீடியோக்களை பதிவேற்றும் பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
“இத்தகைய செயல்கள் நடைபெறக் கூடாது. இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறான நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதோடு, வனவிலங்கு தொடர்பான பிரச்சனைகளை கையாளும் அதிகாரிகளின் முயற்சிகளையும் பாதிக்கின்றன,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
நேற்று, சமூக ஊடகங்களில் 15 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ பரவியது. அதில் புலி உறுமியது போன்ற ஒலி கேட்கப்பட்டதாகவும், அது புரோட்டான் சிட்டி, தஞ்சோங் மாலிம் பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள காடுகளில் பதிவுசெய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள பெர்ஹிலிதான் பணியாளர்கள் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், வனவிலங்குகள் தொடர்பான எந்தவொரு உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு முன், பொதுமக்கள் அதிகாரப்பூர்வத் தகவல் மூலங்களிலிருந்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என யூசோஃப் அறிவுறுத்தினார்.
— பெர்னாமா


