திறந்தவெளி எரிப்பு: கடுமையான நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவு

24 மே 2026, 1:37 AM
திறந்தவெளி எரிப்பு: கடுமையான நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவு

ஷா ஆலம், மே 24: நாட்டில் தற்போது நிலவி வரும் தென்மேற்கு பருவமழைக்காலத்தின் (Monsun Barat Daya) போது, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளியில் எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஊராட்சி மன்றங்கள் (PBT) மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சிலாங்கூர் மாநில அரசு எச்சரித்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் ஏதேனும் வந்தால், ஊராட்சி மன்றங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது ஆரம்பமாகியுள்ள தென்மேற்கு பருவமழைக்காலம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், மாநில அரசின் தயார்நிலை குறித்து பேரிடர் மேலாண்மைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி விளக்கமளித்தார்.

இந்த முறை வழக்கத்தை விடவும் கூடுதல் வெப்பமாகவும் வறண்ட சூழலாகவும் வானிலை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது கடுமையான புகைமூட்டத்தை (Jerebu) உருவாக்குவதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் சவாலாக அமையலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.

இந்த வெப்பமான காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அதிகளவில் நீரைக் குடிக்க வேண்டும், கடுமையான வெயிலில் நீண்ட நேரம் தங்களை உட்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழைக்காலத்தை (Musim Tengkuujuh) எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிலாங்கூர் மாநில அரசு தற்போதே முடுக்கிவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள வடிகால் அமைப்புகளைப் பராமரித்து, மேம்படுத்துமாறு அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் வரை காத்திருக்காமல், இப்போதிருந்தே வடிகால் சீரமைப்புப் பணிகளைச் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே, இறுதியில் ஏற்படும் எதிர்பாராத வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என்று முகமது நஜ்வான் ஹலிமி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) வெளியிட்ட தகவலின்படி, இந்த தென்மேற்கு பருவமழைக்காலம் கடந்த மே 14-ஆம் தேதி தொடங்கியுள்ள வேளையில், இக்காலகட்டத்தில் வழக்கத்தை விடக் குறைந்த அளவிலேயே மழைப்பொழிவு பதிவாகும் என்றும், வானிலை மிகவும் வறண்டதாகவும் வெப்பமாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.