உலு லங்காட், கோம்பாக் மாவட்டங்களில் 50 சமூக சுற்றுலா வழிகாட்டிகள் தேவை - டூரிசம் சிலாங்கூர்

10 மார்ச் 2026, 7:37 AM
உலு லங்காட், கோம்பாக் மாவட்டங்களில் 50 சமூக சுற்றுலா வழிகாட்டிகள் தேவை  - டூரிசம் சிலாங்கூர்

ஷா ஆலாம், மார்ச் 10: உலு லங்காட் மற்றும் கோம்பாக் மாவட்டங்களுக்கான சிலாங்கூர் உள்ளூர் சமூக சுற்றுலா வழிகாட்டி (HKSS) திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்பை டூரிசம் சிலாங்கூர் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 23 வரை திறந்திருக்கும்.

உள்ளூர் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தனித்துவத்தை வருகையாளர்களுக்குப் பகிர்ந்துகொள்ள ஆர்வமுள்ள பொதுமக்களை இத்திட்டத்தில் பங்கேற்க வருமாறு டூரிசம் சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகாரி சுவா யீ லிங் அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 25 சமூக சுற்றுலா வழிகாட்டிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அதற்கான பயிற்சி மே மாதம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

"முதல் கட்டப் பயிற்சியானது, கதை சொல்லும் திறன் மற்றும் கலாச்சார வரைபடத்தை ஒருங்கிணைத்துச் செயல்படும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது," என்றார்.

கோம்பாக்-உலு லங்காட் புவிப் பூங்காவின் (Geopark) சுற்றுலாத் திறனை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரண்டாம் கட்ட ஆல்சேர்ப்பு இந்த இரு மாவட்டங்களிலும் கவனம் செலுத்துகிறது. இந்த நடவடிக்கை, மலேசியாவிற்கு வருகையளிக்கும் ஆண்டு 2026 மற்றும் 2022-இல் தேசிய புவிப் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட கோம்பாக்-உலு லங்காட் புவிப்பூங்காவின் மறு மதிப்பீட்டிற்கு ஏற்புடையதாக அமைந்துள்ளது.

கோம்பாக்-உலு லங்காட் புவிப்பூங்காவை யுனெஸ்கோ உலகளாவிய புவிப்பூங்காவாக (UNESCO Global Geopark) அங்கீகரிக்க மாநில அரசு தீவிரமாக விண்ணப்பித்து வருவதாகவும் இங் யீ லிங் குறிப்பிட்டார்.

எனவே, இரண்டாம் கட்ட சமூக வழிகாட்டிகளுக்கான பயிற்சியில், சிலாங்கூரில் புவிப்பூங்கா சுற்றுலாவின் வளர்ச்சியை வலுப்படுத்த, புவிப்பூங்கா தொடர்பான அறிவுக் கூறுகளும் சேர்க்கப்படும்.

"புவியியல் மற்றும் சூழலியல் துறைகளில் ஆர்வமுள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் கொண்டிருப்பதால், புவிப் பூங்கா சுற்றுலாவிற்கு பெரும் ஆற்றல் உள்ளது. யுனெஸ்கோ உலகளாவிய புவிப்பூங்கா அங்கீகாரத்தைப் பெறுவதற்கான மாநில அரசின் முயற்சியில் பொது மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சியில் சேர வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம்," என்றார்.

கோம்பாக்-உலு லங்காட் புவிப்பூங்காவைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் புவிப்பூங்கா சுற்றுலா வளர்ச்சியில் ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்களையும் (NGO) இத்திட்டத்தில் பங்கேற்க அவர் ஊக்குவித்தார்.

முன்னதாக, எச்.கே.எஸ்.எஸ் திட்டத்தின் முதல் கட்டத்தில், கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் முன்னோடிப் பகுதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 49 சமூக சுற்றுலா வழிகாட்டிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்று மாத பயிற்சியை நிறைவு செய்தனர்.

சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ இங் சூ லிம்மிடமிருந்து அவர்கள் சான்றிதழ்களைப் பெற்றனர்.

பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உள்ளூர் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா அனுபவங்களை வழங்கும் திறன் கொண்ட சமூக வழிகாட்டிகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் 19 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும், மலாய் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகவும், உள்ளூர் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் 20 நாட்கள் பயிற்சிக்கு முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும்.

மேல் விவரங்களுக்கு https://linktr.ee/HKSS2026  என்ற இணைப்பின் மூலமாகவோ அல்லது 011-62286494 என்ற எண்ணில் ஐனியைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ பெறலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.