ஜோகூர் பாரு,ஜூலை 8 - ஜோகூர் பாரு, தாமான் யுனிவெர்சிட்டியில் உள்ள நாசி கண்டார் உணவகமொன்றில், பீஃபா உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தைக் காணத் திரண்டிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு சண்டையிட்டுக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கின்றது.
காற்பந்தாட்டம் காரணமாகவே அந்த சண்டை மூண்டதாகவும், அச்சண்டையில் கடையில் பொருட்களுக்கு பெரிதும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், சண்டை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உணவகத்தின் ஊழியர் தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ஜோகூர் பாரு வட மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னதாக, காற்பந்தாட்டம் திரையிடப்பட்டிருந்த சமயம் ரசிகர்கள் நாற்காலிகளை வீசி சண்டையிட்டுக் கொண்ட காணொளிகள் திரேட்ஸ் (Threads) சமூக ஊடகத்தில் பகிரப்பட்டிருந்தன.
அர்ஜென்டினா இரு கோல்களைப் புகுத்தியப் பின்னரே ரசிகர்கள் மத்தியில் சண்டை மூண்டதாக பகிரப்பட்டிருந்த காணொளிப் பதிவில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.







