பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 13- சிலாங்கூர், சுபாங் ஜெயா பகுதியில் இரு நபர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து புகார் கிடைத்துள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி நடந்ததாகக் கருதப்படும் இச்சம்பவம் குறித்து, நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டதாகவும், இது தொடர்பான காட்சிகள் வாகனத்தின் ‘டேஷ்கேம்’ (dashcam) கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
“ஆரம்பக்கட்ட விசாரணையில், ஆடவர் ஒருவர் புகார்தாரரின் வாகனத்தை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து வந்து, திடீரென பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தியது தெரியவந்தது. மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாதையை மறித்து அவர் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியுள்ளார்,” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாகனம் ஓட்டும்போது ஏற்பட்ட ஒரு தவறான புரிதலால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் விசாரணைக்கு உதவுவதற்காக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்தார். அவர் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 மற்றும் பிரிவு 341 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
“சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், அவர் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்,” என்று வான் அஸ்லான் கூறினார். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றம் குறித்து சுபாங் ஜெயா போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவும் தனி விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், சுபாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தை 03-7862 7100 என்ற எண்ணிலோ அல்லது விசாரணை அதிகாரியை 012-394 5718 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


