கடைசி வரை கைகூடாத உலகக் கிண்ணம்; கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ

7 ஜூலை 2026, 2:14 AM
கடைசி வரை கைகூடாத உலகக் கிண்ணம்; கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ

ஆர்லிங்டென்,டெக்சஸ், ஜூலை 7 - உலகக் கிண்ணம் கடைசி வரை கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கைகூடாமலே போனது.

16-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினிடம் போர்த்துகல் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியடைந்ததை அடுத்து அவரது பயணம் கண்ணீருடன் முடிவுக்கு வந்தது.

காற்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த ஒரு வீரரின் பயணம், மிகப்பெரிய உலகக் கிண்ண மகுடம் இன்றி நிறைவுக்கு வந்தது அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

டல்லாஸ் நகரில் நடைபெற்ற போர்த்துகல் -ஸ்பெய்ன் இடையிலான கூடுதல் நேரத்தில் ஸ்பெய்ன் வீரர் மைகெல் மெரினோ ( Mikel Merino) அடித்த கோல் அந்நாட்டினை அடுத்த சுற்றுக்கு கொண்டுச் சென்றது.

இதையடுத்து 41 வயதான ரொனால்டோவின் உலகக் கிண்ண கனவு கண்ணீரில் மூழ்கியது.

உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவு நனவாகாமல் போனாலும், காற்பந்து வரலாற்றில் ரொனால்டோவின் சாதனைகளும் பங்களிப்புகளும் ஈடு இணையற்றவை.

தனது கிளப் மற்றும் நாட்டுக்காக மொத்தம் 976 கோல்களை அடித்து உலக சாதனையை இவர் படைத்திருக்கிறார்.

தொடர்ந்து ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் இவராவார்.

உலகக் கிண்ணப் போட்டியில் இவர் அறிமுகமான 2006-ஆம் ஆண்டு போர்த்துகல் அரையிறுதிக்கு முன்னேறியது அவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கது.

5 முறை பாலன் டி ஆர் (Ballon d'Or) விருது, 5 முறை வெற்றியாளர் லீக் கிண்ணத்தையும் , யூரோ 2016 வெற்றியாளர் கிண்ணத்தையும் வென்றிருக்கிறார்.

இதுவே தனது கடைசி உலகக் கிண்ணத் தொடர் என்பதை ரொனால்டோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.

போர்த்துகல் தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா என்று செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்டபோது, "நான் எனது குடும்பத்தினரைச் சந்தித்து, அமைதியான மனதுடன் அடுத்த முடிவுகளை எடுப்பேன்" என்று கூறியிருந்தார்.

உலகக் கிண்ணம் கைகூடாவிட்டாலும், காற்பந்து வரலாற்றில் மிகவும் செல்வாக்குமிக்க வீரர்களில் ஒருவராக ரொனால்டோ தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

அவரது சாதனைகளும் பங்களிப்புகளும் வருங்கால சந்ததியினருக்கு என்றும் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.