ஷா ஆலாம், ஜூலை 8 - தெலுக் பங்கிலிமா காராங் பகுதியில் உள்ள ஜாலான் காசாவாரி தொழில்துறைப் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, விதிமுறைகளை மீறிய சில தொழிற்சாலைகளுக்குக் கோலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL) நோட்டீஸ் விடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் துறை (DOE), சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) மற்றும் கோலா லங்காட் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (DID) ஆகியவற்றுடன் இணைந்து கடந்த ஜூன் 30 செவ்வாய்க்கிழமை இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் தங்களின் உரிம நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவும், தங்களின் வளாகங்கள் மற்றும் வடிகால்களின் தூய்மையைப் பேணவும், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை முறையான விதிகளின்படி நிர்வகிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தங்களின் முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்பிகேஎல், சுற்றுச்சூழல் துறை மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் ஆகியவை தங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு அடுத்தகட்ட மேல்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அனைத்துத் தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிகளையும் உரிமக் கட்டுப்பாடுகளையும் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யத் தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.








