திரங்கானு, ஜூலை 6 - கடந்த சனிக்கிழமை இரவு திரங்கானு, தாசிக் கென்யிர் (Tasik Kenyir) பகுதிக்கு அருகில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடியதைத் தொடர்ந்து, அந்தப் பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், முக்கியமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றை முகநூல் பயனர் முகமட் அமிருல் என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தாசிக் கென்யிரில் உள்ள ஓர் எரிபொருள் நிலையத்திற்கு அருகிலுள்ள இரண்டாவது கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (Lebuh Raya Timur-Barat Kedua) நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. அப்பதிவில், அந்த வனவிலங்கு சாலையோரப் பகுதியில் நின்று கொண்டிருப்பதும், பின்னர் மீண்டும் காட்டுப் பகுதிக்குள் நுழைவதும் தெளிவாகக் காட்சியளிக்கிறது.
காவி சாலை (Jalan Gawi) மற்றும் எரிபொருள் நிலையத்திற்கு நேர் எதிரே உள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மிகுந்த ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என்பதால், அந்தப் பகுதியை கடந்து செல்லும் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்காணொளி இணையப்பக்கத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், வனவிலங்குகளின் வாழ்விடத்திற்கு அருகில் இப்பாதை அமைந்துள்ளதால், பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






