மூழ்கியதாக அஞ்சப்படும் வெளிநாட்டு மாணவரைத் தேடும் பணி தொடர்கிறது - தீயணைப்புத் துறை

17 பிப்ரவரி 2026, 6:41 AM
மூழ்கியதாக அஞ்சப்படும் வெளிநாட்டு மாணவரைத் தேடும் பணி தொடர்கிறது - தீயணைப்புத் துறை

கோல திரங்கானு, பிப் 17 – நேற்று நீரில் மூழ்கி மாயமானதாக அஞ்சப்படும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த தனியார் உயர்கல்வி நிறுவன (IPTS) மாணவரைத் தேடும் மற்றும் மீட்கும் (SAR) பணி இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. கோல திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் தொய்பா தாயிப் கூறுகையில், மாணவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணி தற்போது பண்டாக் கடற்கரையோரம் ஏழு கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். "பாதிக்கப்பட்டவரை கண்டுபிடிப்பதற்காக பத்து பூரோக் கடற்கரையோரப் பகுதிகளிலும் தேடுதல் மற்றும் மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், மோசமான வானிலை மற்றும் பெரிய அலைகள் காரணமாக நாங்கள் சில சிரமங்களை எதிர் கொள்கிறோம்," என்று அவர் கூறினார். "பெரிய அலைகள் காரணமாக, நீரில் மீட்புப் படையின் (PPDA) தேடுதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரானவுடன் மீண்டும் தொடரும்," என்று அவர் இன்று பெர்னாமா விடம் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

கெவ்லார் வகை படகைப் பயன்படுத்தும் இந்தத் தேடுதல் பணிக்காக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), ராயல் மலேசிய போலீஸ் (PDRM) மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (APM) ஆகியவற்றைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் களமிறக்கப் பட்டுள்ளனர்.

நேற்று, பத்து பூரோக் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள இன்தி அனைத்துலகப் பல்கலைக்கழக கல்லூரியின் மாணவரான 18 வயதான சித்து மோ லுவின் என்ற மியன்மார் நாட்டவர் காணாமல் போனார்.

திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் தலைமையகத்தின் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி பஹாரும் முஹமட் ஹசிம் கூறுகையில், பத்து பூரோக் கடற்கரையில் நான்கு இளைஞர்கள் சம்பந்தப்பட்ட நீரில் மூழ்கிய சம்பவம் குறித்து மதியம் 12.19 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக கூறினார்.

"இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய நான்கு மாணவர்கள் குளிப்பதற்காக அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் மூவர் வெளி நாட்டினர், ஒருவர் உள்ளூர் மாணவர்," என்றார். -- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.