பெட்டாலிங் ஜெயாவில் புதிய அரசு மருத்துவமனை - உலு சிலாங்கூர் மாவட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்க கோரிக்கை

29 மே 2026, 1:59 AM
பெட்டாலிங் ஜெயாவில் புதிய அரசு மருத்துவமனை - உலு சிலாங்கூர் மாவட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்க கோரிக்கை

ஷா ஆலம், மே 29 - பெட்டாலிங் ஜெயாவில் புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கு முன்மொழியப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு திட்டம் என்ற போதிலும், உலு சிலாங்கூர் மாவட்டத்திலும் இதே போன்ற சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்குத் தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாகெசெட் (MalaysiaGazette) ஊடகத்தின் செய்திப்படி, உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அரசு நிபுணத்துவ மருத்துவமனை ஒன்றைக் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டைக் கொண்டுள்ள உலு சிலாங்கூர் மாவட்டம், சுமார் 3 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருந்தும், அங்கு இதுவரை ஒரு பெரிய அளவிலான அரசு மருத்துவமனை இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்டாலிங் ஜெயாவில் புதிய மருத்துவமனை அமைக்கப்படுவது மக்களுக்குச் சாதகமான வளர்ச்சியாக இருந்தாலும், அதே வேளையில் சமமான முக்கியத்துவம் வாய்ந்த உலு சிலாங்கூர் போன்ற பகுதிகளின் தேவைகளும் புறக்கணிக்கப்படக் கூடாது என்று அவர் கூறினார்.

புதிய மருத்துவமனைக்கான இடத்தை அடையாளம் காண்பதில் மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்களுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என்றாலும், மருத்துவ வசதிகளை எளிதில் அணுக முடியாத தூரப் பகுதிகளில் வாழும் மக்களையும் கணக்கில் கொண்டே நியாயமான சுகாதார மேம்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும் என்று அவர் மேலும் விவரித்தார்.

பெட்டாலிங் ஜெயாவுடன் ஒப்பிடுகையில் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என்று டாக்டர் சத்திய பிரகாஷ் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் (UMMC), தனியார் மருத்துவமனைகள் மற்றும் இதர சிகிச்சை மையங்கள் என ஏராளமான சுகாதார வசதிகள் ஏற்கனவே உள்ளன. ஆனால், உலு சிலாங்கூர் பகுதி மக்கள் தங்களுக்குரிய நிபுணத்துவ சிகிச்சைகளைப் பெற இன்றும் செலாயாங் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் சிலிம் ரிவர் மருத்துவமனைகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.

அவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, இந்த மருத்துவமனைகளைச் சென்றடைய சுமார் 40 முதல் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டிய கட்டாயச் சூழல் நிலவுகிறது.

இப்பகுதியில் ஏற்பட்டு வரும் அதிவேக மக்கள் தொகை பெருக்கம், புதிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொழில்துறை பூங்காக்களின் விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த மாவட்டத்தில் ஓர் அரசு நிபுணத்துவ மருத்துவமனைக்கான தேவை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

முன்னதாக, பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா மற்றும் பூச்சோங் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 500 படுக்கை வசதிகளைக் கொண்ட பெட்டாலிங் ஜெயா மருத்துவமனையைக் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட இடத்தை மாநில அரசும் சுகாதார அமைச்சும் ஏகமனதாக ஒப்புக் கொண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.

கடந்த மே 14-ஆம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. நிலப் பயன்பாடு மற்றும் கட்டுமானச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், அம்பாங் மருத்துவமனையைப் போலவே இந்த புதிய மருத்துவமனையும் செங்குத்து வடிவிலான அடுக்குமாடிக் கட்டிடமாக (Vertical Hospital) கட்டப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தாமான் மேடானில் உள்ள எக்ஸ் பார்க் பிஜே சவுத் (X Park PJ South) பகுதியில் இதற்கென ஆறு ஹெக்டேர் பரப்பளவிலான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.