உலகக் கிண்ணம்: தென் கொரியா வெளியேறியது; தலைமைப் பயிற்சியாளர் ராஜினாமா

29 ஜூன் 2026, 3:08 AM
உலகக் கிண்ணம்: தென் கொரியா வெளியேறியது; தலைமைப் பயிற்சியாளர் ராஜினாமா

மெக்சிகோ, ஜூன் 29 - உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் லீக் சுற்றோடு தென் கொரிய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபரின் கடுமையான கண்டனத்தால், அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென் கொரிய அணியின் முன்னாள் கேப்டனான 57 வயது ஹாங் மியுங்-போ, இரண்டாவது முறையாகத் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருந்த வேளையில், கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரைப் போலவே தற்போதும் லீக் சுற்றைத் தாண்ட முடியாமல் அணிக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும், வீரர்களைத் தேர்வு செய்யும்போதும் தென் கொரிய கால்பந்து விளையாட்டின் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டதாக ஹாங் மியுங்-போ தெரிவித்தார். தனது அனைத்து முடிவுகளும் சரியானவை என்று கூற முடியாது என்றாலும், கொரிய கால்பந்தின் வளர்ச்சியை நோக்கியே தனது உழைப்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், அணியின் மோசமான ஆட்டத்தைக் கடுமையாகச் சாடி, தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டதே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரிய சில மணி நேரங்களிலேயே பயிற்சியாளரின் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது.

அடுத்த மாதம் 34 வயதை எட்டும் நட்சத்திர வீரர் சன் ஹியுங்-மினுக்கு இதுவே கடைசி உலகக் கிண்ணத் தொடராகக் கருதப்படும் வேளையில், அவர் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

கடந்த 2024 ஜூலையில் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதலே சொந்த நாட்டு ரசிகர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வந்த ஹாங் மியுங்-போ, தாம் தேசிய அணியை விட்டு விலகினாலும் தென் கொரிய கால்பந்து அணியின் தீவிர ரசிகனாக என்றும் அதன் வெற்றிக்காகப் பிரார்த்திப்பேன் என்று கூறி விடைபெற்றார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.