அர்ஜென்டினா 2-0 கோல் கணக்கில் அபார வெற்றி; உலக சாதனை படைத்தார் லியோனல் மெஸ்ஸி

23 ஜூன் 2026, 1:26 AM
அர்ஜென்டினா 2-0 கோல் கணக்கில் அபார வெற்றி; உலக சாதனை படைத்தார் லியோனல் மெஸ்ஸி

இஸ்தான்புல், ஜூன் 23 - மலேசிய நேரப்படி நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்து, உலகக் கோப்பை வரலாற்றிலேயே 'அதிக கோல்களை அடித்த வீரர்' என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் முதல் கோலை லியோனல் மெஸ்ஸி அடித்து கணக்கைத் தொடங்கினார். பின், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (Injury time) அர்ஜென்டினா அணியின் 39 வயது கேப்டனான மெஸ்ஸி தனது இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த இரட்டைக் கோல்களின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அவரின் ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

மேலும், உலகக் கோப்பையின் தொடர்ந்து ஆறு போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் பிரான்சின் ஜஸ்ட் ஃபோன்டைன் (Just Fontaine) மற்றும் பிரேசிலின் ஜார்ஜின்ஹோ (Jairzinho) ஆகியோருடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த வாரம் கன்சாஸ் நகரில் நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் அல்ஜீரியா இடையிலான 'குரூப் ஜே' (Group J) லீக் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினாவை 3-0 என வெற்றி பெறச் செய்ததுடன், ஜெர்மனியின் முன்னாள் முன்கள வீரர் மிரோஸ்லாவ் க்ளோசேயின் (Miroslav Klose) 16 கோல் சாதனையைச் சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் அடித்த இரட்டைக் கோல்களின் மூலம், அவர் க்ளோசேயின் சாதனையை முறியடித்து உலகக் கோப்பை வரலாற்றின் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், இப்போட்டியானது மெஸ்ஸியின் 28ஆவது உலகக் கோப்பை போட்டியாகும். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும், ஆறு உலகக் கோப்பை தொடர்களில் (Editions) விளையாடிய உலகின் முதல் கால்பந்து வீரர் என்ற அரிய சாதனையும் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.