ஷா ஆலாம், ஜூன் 23 – சிலாங்கூர் மாநிலத்தில் நுகர்வோருக்கு உதவும் வகையில் நடத்தப்படும் மலிவு விலை உணவு விற்பனைகளும் விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் அடிக்கடி அல்லது மிகப் பெரிய அளவில் நடத்த இயலாது; காரணம் அது சில்லறை வர்த்தகச் சந்தையையும் சிறு வணிகர்களையும் பாதிக்கக்கூடும் என மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவின உயர்வை எதிர்கொள்ள நுகர்வோருக்கு உதவுவதற்கும், அதே வேளையில் சிறு சில்லறை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இடையே மாநில அரசு ஒரு சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இத்தகைய சந்தை விலை திட்டங்களை மிக விரிவான அளவில் மேற்கொள்ளும்போது, அது ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகக் கட்டமைப்பையும் சீர்குலைத்துவிடும் என எச்சரித்த அவர், இதனால் பல மினி மார்க்கெட்டுகளும் சிறிய கடைகளும் தங்களின் விற்பனை பாதிக்கப்படுவதாகப் புகார் கூறக்கூடும் என்றார்.
மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவையை மாநில அரசு உணர்ந்துள்ள போதிலும், இத்தகைய தற்காலிக சந்தை விலை விற்பனை காலவரம்பின்றித் தொடர முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
இது விநியோக முறையைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், ஒருவேளை இதனால் உள்ளூர் சிறு வணிகங்கள் நலிவடைந்து மூடப்படும் நிலை ஏற்பட்டால், இறுதியாக அவர்களும் அரசாங்கத்தின் உதவியை நாடும் சூழலே உருவாகும் என்று சுட்டிக்காட்டினார்.
இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் உள்ளூர் வணிகங்களுக்குள்ளும் பணப்புழக்கம் நீடிப்பதை உறுதி செய்ய, பிங்காஸ் (BINGKAS) மற்றும் இதர திட்டங்களின் கீழ் பற்றுச்சீட்டு (Voucher) அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகளை மாநில அரசு விரிவுபடுத்தியுள்ளது என்றார்.
வவுச்சர்களைப் பயன்படுத்துவதற்காக அதிக அளவிலான மினி மார்க்கெட்டுகளும் பலசரக்குக் கடைகளும் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
'ஏஹ்சான் ரஹ்மா மலிவு விலை விற்பனை' (JER) திட்டத்தை நடத்துவதற்காகக் கூடுதல் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை சிலாங்கூர் மந்திரி புசார் அறிவித்திருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு 10 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.
இத்தகைய மலிவு விலை விற்பனைத் திட்டங்கள் உள்ளூர் வியாபாரிகளை மோசமாகப் பாதிக்காத வண்ணம் அதன் தாக்கங்களை மாநில அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என டத்தோ இஷாம் உறுதியளித்தார்.
இத்திட்டங்களால் இதர வணிகங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டால், அதன் அளவைக் குறைப்பதோ, வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதோ அல்லது தேவைப்பட்டால் தற்காலிகமாக நிறுத்துவதோ குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றார்.







