வாகன நிறுத்துமிட அபராதங்களுக்குத் தள்ளுபடி

27 மார்ச் 2026, 4:27 AM
வாகன நிறுத்துமிட அபராதங்களுக்குத் தள்ளுபடி

ஷா ஆலம், மார்ச் 27: கிள்ளான் அரச மாநகர மன்றம் தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள அபராதத் தொகையைச் செலுத்துவதில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், சிறப்பு அபராதத் தள்ளுபடி பிரச்சாரத்தை மாநகர மன்றம் முன்னெடுத்துள்ளது.

இந்த சலுகையின் கீழ், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது அபராதங்களை மிகக் குறைந்த கட்டணமான 15 ரிங்கிட் முதல் செலுத்தி தீர்வு காணலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அபராதத் தொகையைச் செலுத்த இயலாதவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்பதோடு, இதன் மூலம் மாநகர மன்றத்தின் வருவாயைச் சேகரிப்பதும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாத கால அவகாசத்தைப் பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிள்ளான் அரச மாநகர மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இக்காலக்கட்டத்திற்குள் அபராதங்களைச் செலுத்தத் தவறுபவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது அபராத விவரங்களைச் சரிபார்க்கவும், கட்டணங்களைச் செலுத்தவும் பல எளிய வழிமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநகர சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம், 'Smart Parking MBDK' செயலி, 'Smart Selangor Parking' செயலி மற்றும் உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சின் (KPKT) இணையச் சேவை வாயிலாகச் செலுத்தலாம்.

இது தவிர, கிள்ளான் மாநகர மன்றத்தின் தலைமையகமான சுல்தான் ஆலம் ஷா கட்டிடம், ஜாலான் மேரு பெரும் சந்தை வளாகம், ஜாலான் தெங்கு கெலானா மற்றும் ஜாலான் ராயா பாராட் கிளை அலுவலகங்கள் மற்றும் ஜி.எம் கிள்ளான் பேரங்காடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 'i-Kiosk' இயந்திரங்கள் மூலமாகவும் பொதுமக்கள் தங்களது நிலுவைகளை எளிதாகச் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.