கோலாலம்பூர், டிச 19: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களுக்கு வழக்கமான டோல் கட்டண விகிதத்திலிருந்து 50 சதவீதக் கழிவை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
மலேசியாவின் ஒற்றுமை உணர்விற்கு ஏற்பவும், மக்களின் பயணச் செலவுகளின் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்த கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வகுப்பு 1 வாகனங்களுக்கு (பினாங்கு பாலத்தில் வகுப்பு 2) தள்ளுபடி வழங்கப்படும் என்றார் அவர்.
நாடு முழுவதும் இந்த டோல் கட்டணக் கழிவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டிய RM20.65 மில்லியன் இழப்பீட்டு தொகையை அரசாங்கம் ஏற்கும் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை பள்ளி மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் அல்லது தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க செல்லும் மக்களின் பயணச் செலவுகளில் ஓரளவை குறைக்கும் என்று நம்பப்படுவதாக நந்தா லிங்கி கூறினார்.


