வாஷிங்டன், ஜூன் 21 -லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து,ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியிருப்பதாக ஈரான் அறிவித்திருக்கிறது.
லெபனான் உட்பட போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஈரான் அதிபர்கள் இவ்வார தொடக்கத்தில் முதற்கட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இறுதி உடன்பாட்டினைக் காண அடுத்த 60 நாட்களில் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த உடன்பாட்டினை மீறும் வகையில், லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை மேற்கொண்டது. அந்த சனிக்கிழமை தாக்குதலில் லெபனானில் 47 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே,ஹொர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் அப்பகுதியில் கப்பல் பயணங்கள் தொடர்வதாக
அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) கூறியது. சனிக்கிழமை, உலக சந்தைக்கான ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் மேலான பீப்பாய் எண்ணெய்யை ஏற்றியிருந்த 55 வாணிக கப்பல்கள் ஹொர்முஸ் நீரிணையைக் கடந்திருப்பதாக அக்கட்டளையகம் குறிப்பிட்டது.
ஹொர்முஸ் நீரிணை தொடர்பில் நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்தியில், சுவிட்சார்லாந்தில் நடைபெறும் ஈரான்-அமெரிக்கா இடையிலான நேரடி பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அந்நட்டை சென்றடைந்துள்ளார். ஈரானிய பேராளர் குழுவினரும் சுவிட்சர்லாந்தில் உள்ளனர்.







