ஷா ஆலாம், ஜூன் 20 — மைசெல் (MySel) திட்டத்தின் உதவியால், 21 வயதான டெபோரா ஸ்டீவன் பாய் என்பவரின் கடந்த எட்டு ஆண்டு கால அடையாள அட்டைக்கான காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தொடங்கிய ஈராண்டுகளுக்கும் குறைவான கால கட்டத்திலேயே தனக்கு குடியுரிமை கிடைத்ததாக அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தனது பிறப்புச் சான்றிதழில் 'குடிமகள் அல்லாதவர்' என்று குறிப்பிடப்-பட்டிருந்ததோடு, தாயாரின் முழுமையான ஆவணங்கள் இல்லாததாலும் தன்னால் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்ததாக அவர் கூறினார்.
தனது 12 வயது முதல் அடையாள அட்டை பெறுவதற்காகப் போராடி வருவதாகக் குறிப்பிட்ட டெபோரா, இதனால் யு.பி.எஸ்.ஆர் (UPSR) தேர்வு எழுதியபோது பல சவால்களை எதிர்கொண்டதாகவும், மற்றவர்களைப் போல வேலை செய்யவோ அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவோ முடியாமல் தவித்ததாகவும் கூறினார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் -னிடமிருந்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டப் பின்னர், டெபோரா மெடியா சிலாங்கூர் ஊடகத்திடம் பேசினார்.







