ஷா ஆலாம், ஜூன் 20 — சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்திய 'மைசெல்' (MySel) திட்டத்தின் மூலம், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2025 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 2,342 தனிநபர்கள் தங்களின் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளனர்.
ஒவ்வொரு குடிமக்களும் தங்களுக்குரிய முறையான அடையாள ஆவணங்களைப் பெற்று, அதன்வழி அரசாங்கத்தின் சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை அந்த எண்ணிக்கை பிரதிபலிப்பதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் தெரிவித்தார்.
இன்று காலை ஷா ஆலாமில், மாநில செயலக கட்டடத்தில், மைசெல் திட்டத்தின் கீழ் தீர்வு பெற்ற 100 பேருக்கு புதிதாக அடையாள ஆவணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவர் பேசினார்.
இந்த ஆவணங்கள் அவர்களின் வாழ்க்கையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல புதிய வாழ்வாதார வாய்ப்புகளுக்கு வழியமைத்து தந்திருப்பதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
கடந்த 2018 முதல் 2025 வரை இத்திட்டம் 5,852 விண்ணப்பங்களைப் பெற்றன. அதில் தேசிய பதிவுத் துறை (JPN), குடிநுழைவுத் துறை (JIM) ஆகியவற்றின் ஒத்துழைப்போடு 2,342 விண்ணப்பங்களுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டன. குடியுரிமை, குழந்தை தத்தெடுப்பு, பிறப்புச் சான்றிதழ், சிவப்பு அடையாள அட்டை, குடிநுழைவு தொடர்பான ஆவணப் பிரச்சனைகள் அதில் அடங்கும்.








