அம்பாங் ஜெயா, ஜூன் 19: நேற்று இரவு டத்தாரான் பண்டான் பிரிமா, ஜாலான் பண்டான் பிரிமாவில் அமைந்துள்ள லோட்டஸ் (Lotus) பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) உட்பட மூன்று வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8:27 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெசால் அஸ்பார் கூறினார்.
உடனே, பண்டான் இண்டா மற்றும் அம்பாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 14 வீரர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8:43 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த விசாரணையில், டொயோட்டா வெல்ஃபயர் வாகனம் முற்றிலும் கருகிய வேளையில்,BMW மற்றும் ஹோண்டா (Honda) ரக வாகனங்கள் 80 விழுக்காடு தீக்கிரையாகி இருந்தது தெரிய வந்ததாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.







