ஷா ஆலம், ஜூலை 12 : சிலாங்கூர், செலாயாங்கில் உள்ள தனது கிளையில் பொருட்களை வாங்கச் சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர், திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து லோட்டஸ் மலேசியா நிறுவனம் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இச்சம்பவத்தை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு நாங்கள் வருந்துகிறோம். அங்கு என்ன நடந்தது என்பது குறித்த முழுமையான விவரங்களைப் பெற விரிவான விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் ஏற்கனவே அவரைத் தொடர்பு கொண்டுள்ளோம் என்று லோட்டஸ் நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட 23 வயது பெண்ணின் கணவர் ஃபாரீஸ் (25), தனது மனைவி ஆடைகளுக்குள் பொருட்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி, அங்கிருந்த ஊழியர்கள் அவரை சுமார் 20 நிமிடங்கள் நிற்க வைத்ததாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், அங்கிருந்த ஊழியர் ஒருவர் தனது மனைவியின் வயிற்றைப் பார்த்து, "அக்கா, வயிற்றுக்குள் என்ன பொருளை மறைத்து வைத்திருக்கிறீர்கள்?" என்று முறையற்ற வகையில் கேள்வி எழுப்பியது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
அங்குள்ள ஊழியர்களிடம் தனது மனைவி திருடினார் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு தான் கோரியதாக ஃபாரீஸ் கூறினார். ஆனால், அதற்குப் பதிலாக அந்த ஊழியர்கள், தனது மனைவியின் கர்ப்பத்தை நிரூபிக்க 'பிங்க் புக்' (Pink Book - கர்ப்பகால மருத்துவப் புத்தகம்) காட்டுமாறும், வயிற்றில் பொருட்கள் எதுவும் மறைத்து வைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வயிற்றுப் பகுதியை காட்டுமாறும் கட்டாயப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடையின் மேலாளரின் நடவடிக்கைக்கு எதிராக பொது மக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.






