வாஷிங்டன், ஜூன் 15 – ஈரானிய அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்படிக்கையை எட்டத் தவறினால், தெஹ்ரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் ஏவப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அளித்த பிரத்யேக நேர்காணலில் அதிபர் டிரம்ப் இந்த அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அனடோலு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவிருப்பதாகக் கூறப்படும் அணுசக்தி உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் அல்லது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வருவாயில் 20 விழுக்காட்டுப் பங்கைப் பெற்றுக்கொண்டு, அமெரிக்காவை அப்பிராந்தியத்தின் நிரந்தரப் பாதுகாவலனாக மாற்றப்போவதாக டிரம்ப் கூறினார்.
மேலும், ஈரானுடன் எட்டப்படும் இந்த உடன்படிக்கையின் மூலம் ஹார்முஸ் நீரிணைப் பகுதி நிரந்தரமாகக் கட்டணமில்லாப் பாதையாக (Free Toll) மாற்றப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று திங்கட்கிழமை அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி, லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இரு நாடுகளும் தங்களின் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்பும் இந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியதோடு, பணிகள் இப்போது முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் நேர்காணலில் டிரம்ப் வெளிப்படையாகக் கூறினார்.
நெதன்யாகு மிகவும் கடினமான ஒரு நபர் என்று குறிப்பிட்ட டிரம்ப், உண்மையில் இந்த உடன்படிக்கையைச் செய்ததற்காக அவர் அமெரிக்காவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார் என்றார்.
ஏனெனில், ஒருவேளை ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கினால், அடுத்த இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேல் உலக வரைபடத்திலிருந்து அழிந்துவிடும் என்றும் டிரம்ப் எச்சரிக்கும் தொனியில் சுட்டிக்காட்டினார்.







