மலாக்கா, ஜூன் 15 – நாட்டில் ஊடகச் சுதந்திரத்தை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும், தொழில்முறையாகவும், பத்திரிகை நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செய்திகளை வழங்குவதற்கான இடமும் ஆற்றலும் உறுதி செய்யப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய உயர் கல்வித் துறைத் துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹாலிம், அரசாங்கத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே நிலவும் நல்லுறவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
ஊடகங்கள் என்பவை பொதுமக்களின் குரலாகச் செயல்படும் ஒரு முக்கியப் பாலமாக விளங்குவதே இதற்கு முதன்மைக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, தற்காலத்தில் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவுவதும், தகுந்த ஆதாரமற்ற தகவல்கள் குவிந்து கிடப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், மக்களுக்குத் துல்லியமான தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கை அரசாங்கம் எப்போதும் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இங்கு நடைபெற்ற ஹாங் துவா ஜெயா நாடாளுமன்றப் போலிங் (Bowling) சாம்பியன்ஷிப் போட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
தற்போதைய சூழலில், சமூகத்தினர் வெறும் உணர்ச்சிவசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகளின் அடிப்படையிலான துல்லியமான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டியதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
தொழில்முறைத் தகுதியையும் பத்திரிகை நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் ஊடகங்களுக்கு, ஏதேனும் ஒரு விவகாரம் குறித்துப் பொதுமக்களுக்கு உண்மையானப் பின்புலத்தை விளக்குவதில் பெரும் பொறுப்பு உள்ளது என்றும் ஆடம் அட்லி விவரித்தார்.
பொதுமக்கள் பெறும் தகவல்கள் உண்மையானவை மற்றும் நம்பகமானவை என்பதைத் தீர்மானிப்பதில் செய்தியாளர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்து வரவிருக்கும் சில மாநிலத் தேர்தல்களால் அரசியல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஊடகவியலாளர்கள் தங்களின் கடமைகளைத் தொடர்ந்து தொழில்முறைத் திறனுடன் ஆற்றுவதோடு, சமநிலையானச் செய்தித் தொகுப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அனைத்து ஊடகவியலாளர்களும் பல்வேறு கோணங்களிலானப் பார்வைகளை உள்ளடக்கியச் செய்திகளைச் சுதந்திரமாக வழங்குவதை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாகவும், அப்போதுதான் மக்கள் சிறந்த முறையில் அரசியலை மதிப்பிட முடியும் என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையே இதுவரை நிலவி வரும் சிறந்த ஒத்துழைப்பிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட துணை அமைச்சர், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய நட்புறவின் அடையாளமாகத் திகழ்கின்றன என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.







