ஷா ஆலாம், ஜூன் 14 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட "பிராய்ஸ்" (BRAIS) எனப்படும் சிறப்பு உதவித் திட்டத்திற்கு, தொடங்கப்பட்ட ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
சிலாங்கூர் பிரத்தியேக மனிதவள அறவாரியத்தின் (YANIS) தலைமை நிர்வாக அதிகாரி கமருல் ஹிஷாம் யோப் ஹாஷிம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று உத்தாரா மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UiTM) புஞ்சாக் ஆலம் வளாகத்தில் உள்ள அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (ஆட்டிசம்) மாநில அளவிலான விழிப்புணர்வு திட்டத்தின் போது, அவர் மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இதுவரை மொத்தம் 2,381 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட 1,800 விண்ணப்பங்கள் என்ற இலக்கை விட மிகவும் அதிகம் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதி திங்கட்கிழமையுடன் இந்த விண்ணப்பக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்குள் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,500 முதல் 3,000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை கட்டண உதவிக்காக மட்டுமே அதிகபட்சமாக 1,480 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்ணப்பங்களுக்கான பரிசீலனை மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் அனைத்தும், விண்ணப்பக் காலம் முடிவுற்ற உடனே தொடங்கப்படும் என்று கமருல் ஹிஷாம் உறுதியளித்தார்.
இச்செயல்முறைகள் அனைத்தும் நிறைவடைய ஏறத்தாழ இரண்டு வாரங்கள் பிடிக்கும் என்றும், அதன் பின்னர் தகுதியான பயனாளிகளுக்கு இந்த நிதியுதவிகள் முறையாக விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் உதவித் திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த உதவித் திட்டம், தற்போது மேலும் முறையான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் "பிராய்ஸ்" (BRAIS) என மறுபெயரிடப்பட்டுள்ளது. \
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காக ஐந்து முக்கிய பிரிவுகளில் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக சிகிச்சை மையக் கட்டணம், மருத்துவச் செலவுகள் மற்றும் சிறப்புத் தேவைகளுக்கான உதவிகள் என தலா 1,200 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும், சிறப்பு உபகரணங்களைப் பெறுவதற்கு 3,000 ரிங்கிட் வரையிலும், சிறப்புப் பள்ளிகளின் கல்வி ஆவணக் கட்டணமாக 120 ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த கழிப்பறைகளை அமைப்பதற்கும் அல்லது அவற்றை மேம்படுத்துவதற்கும் 1,500 ரிங்கிட் வரையிலான நிதியுதவியும் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகவும், மலேசியப் பிரஜைகளாகவும் இருக்க வேண்டும்.
அதே வேளையில், பயனாளிகள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், சமூக நலத்துறையில் (JKM) பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ மாற்றுத்திறனாளி (OKU) அட்டையை வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியமாகும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான உதவிப் பிரிவிற்கான உரிய ஆவணங்களுடன், 'யானிஸ்' (YANIS) அறவாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக இன்னும் ஒரு வார காலத்திற்குள் தங்களின் விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







