ஷா ஆலாம், நவ 19- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் நிர்வாகத் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 'MyDigital ID' என்ற அடையாள அட்டையைப் பயன்படுத்துவது குறித்து சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்த யோசனை சமீபத்தில் நடைபெற்ற மாநில அரசாங்கக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறைச் செயற்குழு உறுப்பினர் (Exco Pelaburan) இங் ஸீ ஹான் (Ng Sze Han) தெரிவித்தார்.
இந்த முன்முயற்சியானது மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இணைந்திருப்பதன் மூலம், பொதுமக்களின் அத்தியாவசிய அலுவல் பணிகள் மற்றும் மாநில நிர்வாகத்தை எளிதாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் (ADUN) டத்தோ ஹாரிசன் ஹாசான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும்போது, மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய விஷயங்களில் மத்திய அரசாங்கத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 'My Digital ID'-ஐப் பயன்படுத்தும் சிலாங்கூரின் நோக்கம் குறித்து அவர் இதனைத் தெரிவித்தார்.




