ஷா ஆலம், ஜூன் 12: உரிமம் இன்றியும் சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பாகவும் செயல்பட்டு வந்த மூன்று மறுசுழற்சி மையங்களை உடனடியாக மூடுமாறு கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPKS) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈஜோக், பத்து 22 மற்றும் பத்து 23 ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த இந்த மையங்களுக்கு எதிராக நேற்று காலை 9 மணி முதல் சுமார் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட கூட்டு அமலாக்க நடவடிக்கையின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த சோதனையின் போது மொத்தம் மூன்று மறுசுழற்சி மையங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது, உரிய வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்டது, திறந்தவெளியில் குப்பைகளை எரித்தது, வளாகத்தின் தூய்மை நிலை திருப்திகரமாக இல்லாதது மற்றும் தற்போதைய விதிமுறைகளைப் பின்பற்றாமல் மின் மற்றும் மின்னணு கழிவுகளை (E-waste) கையாண்டது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த மூன்று வளாகங்களும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டதோடு, அங்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், விதிமுறைகளை மீறிய அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நான்கு அபராத நோட்டீஸ்களும், எட்டு வழிகாட்டுதல் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன. இதில் இரு வளாகங்களில் பறிமுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கூட்டு நடவடிக்கையில், மின் மற்றும் மின்னணு கழிவு மேலாண்மை விதிமீறல்கள் மற்றும் திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறை (DOE) சட்டப்படியான நடவடிக்கை எடுத்த வேளையில்,மலேசிய காவல்துறைபடை(PDRM) சோதனை நடந்த இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய உதவியது.
கோலா சிலாங்கூர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நடவடிக்கைகளும் உரிம நிபந்தனைகளுக்கும் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கும் இணங்குவதை உறுதி செய்ய, இதுபோன்ற அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் நகராண்மைக் கழகம் மேலும் எச்சரித்துள்ளது.








