ஷா ஆலம், ஜூன் 11: சிலாங்கூர் மாநில முதியோர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில், ‘2026-ஆம் ஆண்டுக்கான முதியோர் விளையாட்டு லீக்’ போட்டிகளை சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாநில அளவிலான இந்த விளையாட்டுப் போட்டி, முதியோர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பதோடு, ஆரோக்கியமாக வாழ்வதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவும் நடத்தப்படுவதாக அத்துறை தெரிவிவித்துள்ளது.
இது குறித்து அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலத்தில் உள்ள அனைத்து முதியோர்களும் இந்த லீக் போட்டியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் முதியோர்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும், உற்பத்தித் திறன் மிக்கவர்களாகவும் விளங்குவதற்கு இப்போட்டிகள் ஒரு சிறந்த தளமாக அமையும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பெத்தான்க் (Petanque), போலிங் (Bowling) மற்றும் அம்பு எறிதல் (Darts) ஆகிய மூன்று விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மூன்று போட்டிகளும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தப்படவுள்ளன.
இவற்றில், பெத்தான்க் போட்டி எதிர்வரும் ஜூன் 21-ஆம் தேதி செக்கோலா ஆகாமா மெனெங்கா திங்கி தெங்கு அம்புவான் ஜெமாவில் (Sekolah Agama Menengah Tinggi Tengku Ampuan Jemaah) நடைபெறவிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, போலிங் மற்றும் அம்பு எறிதல் போட்டிகள் ஜூன் 27-ஆம் தேதியன்று யு.எஸ்.ஜே-வில் உள்ள அம்பாங் சூப்பர்போல் (Ampang Superbowl, Summit USJ) மையத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் நிலை வெற்றியாளர்களுக்கு 500 ரிங்கிட் ரொக்கமும் பதக்கமும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தை வெல்லுபவர்களுக்கு 300 ரிங்கிட் ரொக்கமும் பதக்கமும், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 200 ரிங்கிட் மற்றும் 100 ரிங்கிட் ரொக்கப் பணத்துடன் பதக்கங்களும் வழங்கி சிறப்பிக்கப்படும்.
இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படவில்லை, அதாவது அனுமதி முற்றிலும் இலவசமாகும்.
எனினும், ஒவ்வொரு போட்டிக்கும் தலா முதல் 60 பங்கேற்பாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர் என்பதால், தகுதியுள்ள சிலாங்கூர் மாநில முதியோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரைந்து தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







