ஷா ஆலம், செப். 15 - கோல குபு பாருவில் உள்ள அலி ரிவர் முகாம் தளத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சுமார் 400 வருகையாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அதிகாலை 5.47 மணியளவில் அழைப்பு வந்ததாக
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பணியாளர்கள் மற்றும் ஒரு வாகனத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 பேர் என மதிப்பிடப்பட்டுவதாகவும் அவர்கள் வெற்றிகரமாக மேடான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு தீயணைப்பு வீரர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை தணிந்து வரும் நிலையில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிர் சேதம் ஏற்படவில்லை