பௌத்த மற்றும் தாவோ சங்கங்களுக்கு 1.29 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம் - லீமாஸ்

7 ஜூன் 2026, 9:56 AM
பௌத்த மற்றும் தாவோ சங்கங்களுக்கு 1.29 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம் - லீமாஸ்

ஷா ஆலம், ஜூன் 7 – சிலாங்கூர் மாநில அரசாங்கம், பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ மதங்களுக்கான சிலாங்கூர் சிறப்புக் குழுவின் (லீமாஸ்) வழியாக, மாநிலம் முழுவதும் உள்ள 128 பௌத்த மற்றும் தாவோ சங்கங்களுக்கு 1.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவிகளை விநியோகம் செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய லீமாஸ் அமைப்பின் கூட்டுத் தலைவரான இங் ஸீ ஹான், இதுவரை தங்களின் குழுவிற்கு வந்த விண்ணப்பங்களில் 130 விண்ணப்பங்களுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கென மொத்தம் 1.39 மில்லியன் ரிங்கிட் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனை விவரித்த அவர், நடப்பாண்டில் லீமாஸ் அமைப்பிற்குச் சிலாங்கூர் மாநில அரசு 8 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்றும், அதில் 3.62 மில்லியன் ரிங்கிட் நிதியானது பௌத்த மற்றும் தாவோ மத அமைப்புகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் 4ஆம் தேதி வரை தங்களின் குழுவிற்கு மொத்தம் 318 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகக் கூறிய இங் ஸீ ஹான், மீதமுள்ள விண்ணப்பங்களையும் மிக விரைவாகப் பரிசீலித்து, அவற்றுக்கான நிதியுதவிகளை உடனுக்குடன் வழங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்று காலை லீமாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கோலாகலமாக நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில அளவிலான விசாகத் தினக் கொண்டாட்ட நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலக்கட்டத்தில் இஸ்லாமியரல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்காக (RIBI) சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 481 நிலப்பகுதிகள் முறைப்படி அரசிதழில் (gazette) பதியப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதில், தற்போதைய சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் மட்டுமே 57 நிலப்பகுதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சிறப்பான திட்டங்களின் மூலம், இஸ்லாமியரல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அதிகமான நிலங்களை ஒதுக்கீடு செய்த மலேசியாவின் முதன்மை மாநிலமாகச் சிலாங்கூர் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று இங் ஸீ ஹான் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், இன்னும் சில மாதங்களில் 500 நிலப்பகுதிகள் என்ற தங்களின் இலக்கைச் சிலாங்கூர் மாநிலம் மிக எளிதாகத் தாண்டிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள அனைத்துச் சமூகங்களுடனும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதன் மூலம், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு இணக்கமான, முற்போக்கான மற்றும் வளமான சிலாங்கூர் மாநிலத்தைக் கட்டியெழுப்புவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.