குனுங் பத்து பூத்தே மலையேற்றப் பாதை மூடல்; எஸ்.ஓ.பி நடைமுறைகள் மறுஆய்வு

5 ஜூன் 2026, 6:29 AM
குனுங் பத்து பூத்தே மலையேற்றப் பாதை மூடல்; எஸ்.ஓ.பி நடைமுறைகள் மறுஆய்வு

ஷா ஆலம், ஜூன் 5: மே 23-ஆம் தேதி முதல் 49 வயதான பெண் மலையேறும் பயணியான ஜஸ்லிண்டா சலுடின் காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து, தாப்பாவில் உள்ள கூனோங் பத்து பூத்தேயில் (Gunung Batu Putih) மலையேற்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மூடல், பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும், அப்பகுதியில் உள்ள மலையேற்றப் பாதையை மறுமதிப்பீடு செய்ய அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பேராக் மாநில வனத்துறை இயக்குநர் டத்தோ முகமட் பஸ்ரி அப்துல் மனாஃப் தெரிவித்ததாக மலேசியா கெசட் (MalaysiaGazette) செய்தி வெளியிட்டுள்ளது.

"மலையேறுபவர்கள் இப்பகுதியை அடிக்கடி பயன்படுத்துவதால், இப்பாதையின் பாதுகாப்பு அளவை நாங்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். இது மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு சில மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட வேண்டும்.

"இந்தச் செயல்முறை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அத்துணை காலத்திற்கும், மலையேற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

இன்று பேராக் டாருல் ரிட்சுவான் கட்டடத்தில், பேராக் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சராணி முகமட் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த 2026-ஆம் ஆண்டு பேராக் மாநில அளவிலான அனைத்துலக வன தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

வருகையாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மாநிலத்தில் மலையேற்றத்திற்கான நிலையான இயக்க நடைமுறையையும் (SOP) தமது தரப்பு மறுஆய்வு செய்யும் என்று முகமட் பஸ்ரி குறிப்பிட்டார்.

"மலையேற்ற எஸ்.ஓ.பி தொடர்பான அனைத்து அம்சங்களையும், குறிப்பாக வருகையாளர்களின் எண்ணிக்கைக் கட்டுப்பாடு மற்றும் தற்போதுள்ள நுழைவு நேரக் கட்டுப்பாட்டு (cut-off time entry) அமலாக்கம் குறித்தும் நாங்கள் ஆராய்வோம்.

"எதிர்காலத்தில் மலையேற்ற நடவடிக்கைகளின் நிர்வாகம் மிகவும் பாதுகாப்பானதாகவும், முறையானதாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியமானது," என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, தேவையற்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான அபாயத்தைக் குறைக்கும் வகையில், வனப் பகுதிகளுக்குள் நுழைவதற்கும் மலையேற்ற நடவடிக்கைகளுக்கான எஸ்.ஓ.பி-களை மேம்படுத்துவது குறித்தும் மாநில அரசு பரிசீலித்து வருவதாக பேராக் மாநில அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில் நுட்பக் குழுவின் (EXCO) தலைவர் தே கோக் லிம் தெரிவித்திருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.