ஈப்போ, ஜூன் 5: கடந்த மே 24-ஆம் தேதி தாப்பா அருகே உள்ள கூனோங் பத்து பூத்தே (Gunung Batu Putih) மலையேற்றத்தின் போது காணாமல் போன 49 வயதான மலையேறும் பெண்மணியான ஜஸ்லிண்டா சலுடின், மிகவும் நல்லவர், அன்பானவர், தாராள மனதுடையவர் மற்றும் பிறருக்கு உதவக்கூடியவர் என்று வர்ணிக்கப் பட்டுள்ளார்.
இதனை அவரது அக்காவான 52 வயது ஜாசிமா சலுடின் தெரிவித்தார். மலையேற்றத்தைத் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, தொலைபேசி வாயிலாகவே தனது இளைய தங்கையுடன் அவர் இறுதியாகப் பேசியுள்ளார்.
"என் தங்கை ஜஸ்லிண்டா மிகவும் நல்லவர்... சில சமயங்களில் அவளது நல்ல குணத்தை சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால் நான் தலையிட வேண்டியிருக்கும். நான் அவளைப் புகழவில்லை, ஆனால் ஜஸ்லிண்டாவின் இயல்பே அதுதான்," என்று பெர்னாமாவிடம் கூறிய அவர், குடும்பத்தினர் அவளது பேச்சை மிகவும் நினைத்து ஏங்குவதாகக் குறிப்பிட்டார்.
இயற்கைச் சூழலை விரும்புவதாலும், நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்வதாலும், ஜஸ்லிண்டா சிறுவயது முதலே நீர் மூழ்குதல் (Scuba diving) மற்றும் மலை பைக்கிங் (MTB) போன்ற சாகச நடவடிக்கைகளில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்ததாக அவர் கூறினார்.
இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருந்தபோதிலும், தனது உடல்நிலை மலையேற்ற நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கவில்லை என்று ஜாசிமா கூறினார்.
"இந்தோனேசியாவில் உள்ள குனுங் ரிஞ்சானியில் (Gunung Rinjani) மலையேற்றத்தை முடித்துத் திரும்பிய பின்னர், 2022-ஆம் ஆண்டில் நாங்கள் கடைசியாக ஒன்றாக ஏறிய மலை குனுங் லியாங் (Gunung Liang) ஆகும். 2019-இல் குனுங் யோங் யாப்பில் (Gunung Yong Yap) G7 மலையேற்றத்தை ஒன்றாக முடிக்க நாங்கள் திட்டமிட்டிருந்ததை என்னால் மறக்கவே முடியாது," என்று அவர் கூறினார்.
ஜஸ்லிண்டா இதற்கு முன்பு பல முறை மலையேற்றங்களில் ஈடு பட்டுள்ளார் என்றும், குனுங் கினபாலு, குனுங் செமங்கோக் மற்றும் குனுங் ஸ்டோங் ஆகிய மலைகளையும், மற்ற சிறு குன்றுகளையும் அவர் வெற்றிகரமாக ஏறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஆம், நிச்சயமாக அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேறி வருகிறார், ஆனால் மலையேற்ற அனுபவம் என்பது பெருமைப்படுவதற்கோ அல்லது எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதையோ குறிக்காது," என்று நான்கு உடன் பிறப்புகளில் மூன்றாவதாகப் பிறந்த அவர் கூறினார்.
தற்போது சிறிய அளவில் தொடரும் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR) குறித்துப் பேசிய ஜாசிமா, தங்கள் குடும்பத்தினர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும், ஜஸ்லிண்டா விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறினார்.
"வழக்கின் முன்னேற்றம் குறித்து நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம் அல்லது அதிகாரிகளிடம் கேட்கிறோம், ஏனெனில் ஒவ்வொரு தகவலும் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானது," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், குனுங் பத்து பூத்தே மலையேற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் விமர்சனங்களை மறுத்த ஜாசிமா, உண்மை நிலை என்னவென்று தெரியாமல் குறை கூறுவதைப் பொதுமக்கள் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
"இருப்பினும், பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஜஸ்லிண்டாவுக்காகப் பிரார்த்தனை செய்பவர்கள் இருப்பதை நான் அறிவேன்... அவரை மதிப்பிடுபவர்கள் யாருக்கும் அவரைப் பற்றி முழுமையாகத் தெரியாது... அப்போது என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது, ஜஸ்லிண்டாவுடன் இருந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்," என்று அவர் கூறினார்.
ஜஸ்லிண்டா யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காகத் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இப்போது முக்கியமானது யார் பக்கம் தவறு அல்லது உண்மை என்று ஆராய்வதை விட, தனது தங்கை விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதே ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எனது தங்கையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்," என்று கூறிய அவர், சமூக வலைதளங்களில் தனது தங்கை பல விமர்சனங்களை எதிர் கொண்டதை அடுத்து ஊடகங்களுக்கு அறிக்கை அளிக்க முடிவெடுத்ததாக தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை, தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அப்துல் மாலிக் ஹசிம் கூறுகையில், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைமையிலான ஜஸ்லிண்டாவைத் தேடும் SAR பணிகள் சிறிய அளவில் தொடர்வதாகத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, காணாமல் போன அப்பெண்மணி, மற்ற 13 நபர்கள் மற்றும் இரண்டு வனத்துறை மலை வழி காட்டிகளுடன் (MGP) இணைந்து மே 23 அன்று அதிகாலை 2 மணிக்கு, போஸ் கெடோங் - குனுங் பா காடிங் - குனுங் பத்து பூத்தே - கோலா வோ (Pos Gedung–Gunung Bah Gading–Gunung Batu Putih–Kuala Woh) பாதை வழியாக டிரான்ஸ் ஸ்பென்சர் சாப்மேன் (Trans Spencer Chapman) மலையேற்றத்தைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மலையேற்றத்தின் போது ஜஸ்லிண்டா மற்றும் 41 வயதான முகமட் ஹனாஃபி நெய்க்மாட் (Mohd Hanafi Neikmad) என்ற மற்றொரு மலையேறுபவர் உடல்நலக் குறைபாட்டால் மலையேறுவதை நிறுத்தினர். இருப்பினும், தனியார் நிறுவனம் ஒன்றில் விநியோகச் சங்கிலி அதிகாரியாகப் பணிபுரியும் ஜஸ்லிண்டா மலையின் உச்சியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும், மே 24 அன்று அவர் கடைசியாகக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்லிண்டா கண்டுபிடிக்கப்படுவார் என்ற நம்பிக்கையை குடும்பத்தினர் இழக்கவில்லை, தொடர்ந்து பிரார்த்திக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்
5 ஜூன் 2026, 5:28 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
வகைnational
உங்கள் கருத்து என்ன?





