அமைதி உடன்பாடு எட்டப்பட்டால் ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியைச் சந்திக்கத் தயார் - டொனால்ட் டிரம்ப்

5 ஜூன் 2026, 4:55 AM
அமைதி உடன்பாடு எட்டப்பட்டால் ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியைச் சந்திக்கத் தயார் - டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன், ஜூன் 5: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முறையான அமைதி உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில், ஈரானின் புதிய உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா கமேனியை (Mojtaba Khamenei) நேரில் சந்தித்துப் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், தமக்கு இப்போதைக்கு அத்தகையச் சந்திப்பை நடத்த விருப்பமில்லை என்றாலும், ஒருவேளைச் சந்திப்பு சாத்தியமானால் அவரைச் சந்திப்பதை ஒரு கௌரவமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நல்ல உடன்பாடு ஏற்படுகிறதா என்பதைப் பார்க்கத் தாம் விரும்புவதாகவும், அவ்வாறு உடன்பாடு எட்டப்பட்டால் ஈரானின் உச்சத் தலைவரைச் சந்திப்பது சாத்தியமே என்றும், அதற்குத் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் டிரம்ப் விளக்கமளித்தார்.

கமேனிக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் ஒரு தொழில்முறை சார்ந்த (Professional) தலைவர் என்றும், குறிப்பிட்ட சில வட்டாரங்களில் அவருக்கு நல்லதொரு நற்பெயர் இருப்பதாகவும் டிரம்ப் மேலும் கூறினார்.

இத்தகையச் சந்திப்பு அமெரிக்க மண்ணில் நடக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்துத் தாம் அதிகமாகக் கேள்விப்படவில்லை என்றும், தாம் அதனைப் பரிந்துரைக்கவில்லை என்றாலும் சிலர் அத்தகைய ஆலோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் கமிட்டி விசாரணையில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனி உயிரோடு இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர் சிறப்பான முறையில் ஈடுபாடு காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

ஈரான் அமைப்பில் உள்ள பல தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அவர் பொதுவெளியில் தோன்றுவது தற்காப்பு ரீதியாக உகந்ததாக இருக்காது என்று ரூபியோ குறிப்பிட்டார்.

இருப்பினும் கமேனியின் அனைத்துத் தொடர்புகளும் எழுத்துப்பூர்வமாகவும் இடைத்தரகர்கள் மூலமாகவுமே நடந்து வந்தாலும், அவர் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் சில நிலைகளில் தீவிரமாகப் பங்கெடுத்து வருகிறார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் உறுதிப்படுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.