ஜோகூர் பாரு, ஜூன் 5: ஜோகூர் மாநிலத்திலுள்ள செகாமட் மருத்துவமனை (Hospital Segamat) எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மூடப்படவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மையற்றது என்று ஜோகூர் மாநில சுகாதாரத் துறை (JKNJ) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
செகாமட் மருத்துவமனை வழக்கம் போல் இயங்கி வருவதாகவும், அங்கு எந்தவொரு மூடல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஜோகூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் தெரிவித்தார்.
அதே வேளையில், மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் (Obstetrics and Gynaecology - O&G) துறைக்கான மருத்துவப் பரிந்துரைகளைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது தொடர்பாக இணையத்தில் பரவி வரும் அதிகாரப்பூர்வக் கடிதம் குறித்தும் மாநில சுகாதாரத் துறை விழிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
செகாமட் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறையில் மக்களுக்குத் தடையற்ற, சிறப்பான சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், அங்குள்ள மருத்துவச் சேவை ஏற்பாடுகளைத் தற்போது மாநில சுகாதாரத் துறை மிக ஆழமாக ஆராய்ந்து வருவதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த விவகாரத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அடுத்தகட்டத் திட்டங்கள் குறித்த முறையான விவரங்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவச் சேவைகளை மறுசீரமைப்பு செய்யும்போதும், மனித வளத்தை மேம்படுத்தும்போதும், மருத்துவமனையின் அன்றாடச் செயல்பாடுகளோ அல்லது பொதுமக்களுக்கான சிகிச்சைகளோ எந்தவொரு சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ஜோகூர் மாநில சுகாதாரத் துறை முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.
முன்னதாக, செகாமட் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதன் காரணமாக அந்த மருத்துவமனை ஒட்டுமொத்தமாக மூடப்படவுள்ளதாகவும் 'த்ரெட்ஸ்' (Threads) சமூக ஊடகப் பக்கத்தில் பயனர் ஒருவரால் பதிவிடப்பட்ட தகவல் மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்குச் சுகாதாரத் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.







