ஷா ஆலம், ஜூன் 5: பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஓராங் அஸ்லி சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் நலனை உறுதி செய்வதற்காக, அவர்களின் குடியிருப்பு நிலங்களை அரசிதழில் வெளியிடும் (pewartaan) செயல்முறையை துரிதப்படுத்தும் முயற்சிகளை சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தளமாக, தாம் தலைமையேற்று நடத்திய பெட்டாலிங் மாவட்ட ஓராங் அஸ்லி கிராம நிலங்களை அரசிதழில் வெளியிடுவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைந்ததாக ஓராங் அஸ்லி விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
"புக்கிட் பண்டாராயா (ஆயர் கூனிங்), புக்கிட் லஞ்சான் (டேசா தெமுவான் மற்றும் டேசா ரியாங்), சுங்கை ராசாவ் ஹிலிர் மற்றும் சுங்கை ராசாவ் உலு ஆகிய ஓராங் அஸ்லி கிராமங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட பகுதிகள், உரிமைத் தகுதி பெற்ற நிலங்கள், அரசிதழில் வெளியிடுவதற்கான விண்ணப்பச் செயல்முறையில் உள்ள பகுதிகள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட புதிய பகுதிகள் உள்ளிட்ட நிலங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது," என அவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (JAKOA), சிலாங்கூர் நிலம் மற்றும் கனிமவள அலுவலகம் (PTGS), சிலாங்கூர் மாநில வனத்துறை (JPNS) மற்றும் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பொது வசதிகளை ஒப்படைத்தல், நில ஒதுக்கீட்டு நிலை, உரிமம் பெற்ற நில அளவையாளர்களால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகள் மற்றும் வரைபடத் தயாரிப்பு, அத்துடன் சிலாங்கூர் வனத்துறையின் (JPNS) ஒப்புதல்கள் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகப் பாப்பாராய்டு கூறினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம், குறிப்பாகச் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய வனக் காப்பகப் பகுதிகளில் உள்ள நிலங்களை அரசிதழில் வெளியிடும் செயல்முறையைத் துரிதப்படுத்துவதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பெட்டாலிங் மாவட்ட ஓராங் அஸ்லி சமூகத்தினரின் நலனுக்காக மிகவும் விரிவான மற்றும் நிலையான தீர்வினை உறுதி செய்யும் நோக்கில், கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து தொடர் நடவடிக்கைகளும் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
ஓராங் அஸ்லி மக்களின் குடியிருப்புகளை அரசிதழில் வெளியிடும் பணிகளைச் சிலாங்கூர் அரசு தீவிரப்படுத்துகிறது
5 ஜூன் 2026, 1:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஓராங் அஸ்லி கிராமங்களின் நிலப்பிரச்சனை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதம்
Shalini Rajamogun
22 மே 2026

selangor
ஓராங் அஸ்லி சமூகத்தினருக்கான புதிய வீட்டு வசதி திட்டம் - பாப்பாராய்டு
Shalini Rajamogun, Sheeda Fathil
9 ஜூன் 2026

selangor
புக்கிட் பாஜா ஓராங் அஸ்லி கிராமத்தைச் சேர்ந்த 100 பேருக்கு RM200,000 வரை இழப்பீடு வழங்கப்பட்டது
Shalini Rajamogun, Nazli Ibrahim
27 மே 2026

national
ஓராங் அஸ்லி கிராமங்களிலும் ருக்கூன் தெத்தங்கா (KRT) திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் தயார்
Shalini Rajamogun
1 மார்ச் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



