கோலாலம்பூர், ஜூன் 4 – நாட்டில் உள்ள சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஆழமாக விதைக்கும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியை (KLIBF) முன்னிட்டு புதிய புத்தகத் தொகுப்பு ஒன்றை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகக் கண்காட்சியில், இளம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும் ஓவியருமான எமிலியா யூசோப் என்பவருடன் இணைந்து கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய புத்தகத் தொகுப்பில், 'ஹரிமாவ் பெரானி பிசாரா', 'பென்யு யாங் ஹெபாட்', 'கொங்சி டெங்கான் காவான்', 'ஓராங் ஊத்தான் டான் வர்ணா', 'மனா காஜா?', மற்றும் 'பெலுவாங் கெடுவா' ஆகிய சுவாரசியமான தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஃபட்லினா சிடெக், இந்த முறை எமிலியா யூசோப்புடன் இணைந்து புதிய புத்தகங்களைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் தாம் எப்போதும் மிகுந்த கவனம் செலுத்துபவர் என்பதால், ஏன் தாங்களே சொந்தமாகப் புத்தகங்களை வெளியிடக்கூடாது என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவானதாக அவர் கூறினார்.
தங்களின் குழுவினருக்கும் எமிலியாவின் குழுவினருக்கும் இடையிலான இந்த கூட்டு உழைப்பு இப்புத்தகங்களை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதாகவும், சிறுவர் இலக்கியங்கள் வாசிப்பு மீதான காதலை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை தாங்கள் இருவரும் ஆழமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிறுவர்களுக்கான புத்தகங்கள் வெறும் வாசிப்புப் பொருட்கள் மட்டுமல்ல என்றும், அவை நற்பண்புகள், அன்பு மற்றும் பிறர் மீதான இரக்க உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிறந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன என்றும் அவர் விவரித்தார்.
இன்றைய காலகட்டத்தில் நமக்கு வழிகாட்டிகள் அதிகமாக இருந்தாலும், உண்மையான முன்மாதிரிகள் குறைவாக இருக்கும் சூழல் நிலவுவதால், சிறுவர் கதைகளில் உள்ள படிப்பினைகளும் நல்ல உதாரணங்களும் மிகவும் முக்கியமானவை என்றும், அவற்றுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஃபட்லினா வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2026 கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் அனைவரும், அரங்கம் எண் 818-க்குச் சென்று இந்த புதிய புத்தகங்களைப் பெற்றுக் கொள்வதோடு, ‘பெரம்புவான் மெம்பாசா’ (பெண்கள் வாசிப்பு இயக்கம்) குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.







