வணிக வளாகங்களில் வரி வசூல் நடவடிக்கை - எம்பிஎஸ்ஜே எச்சரிக்கை

26 மே 2026, 10:39 AM
வணிக வளாகங்களில் வரி வசூல் நடவடிக்கை - எம்பிஎஸ்ஜே எச்சரிக்கை

சுபாங் ஜெயா, மே 26: எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அதிகளவில் மதிப்பீட்டு வரி பாக்கி (Cukai Taksiran) வைத்துள்ள வணிக மற்றும் வியாபார வளாகங்களை இலக்காகக் கொண்டு, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 'பறிமுதல் நடவடிக்கையை' (Operasi Sita) சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே) அமல்படுத்தவுள்ளது.

மாநகரத்தின் பொதுச் சேவைகள் எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடர்வதை உறுதி செய்யும் பொருட்டு, சொத்து உரிமையாளர்கள் தங்களின் வரி செலுத்தும் கடமையை நிறைவேற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இந்த அதிரடி நடவடிக்கை 1976-ஆம் ஆண்டு உள்ளாட்சி அரசாங்கச் சட்டத்தின் (சட்டம் 171) கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத் தலைவர் டத்தோ அமிருல் அஜிசான் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.

சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் மாதாந்திர முழு வாரியக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த அதிரடி நடவடிக்கையின் முதற்கட்டமாக, 10,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக மதிப்பீட்டு வரி பாக்கி வைத்துள்ள வணிக மற்றும் வியாபார வளாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சொத்து உரிமையாளர்கள், குறிப்பாக அதிக வரி பாக்கி வைத்துள்ள வணிகத் துறையினர், மதிப்பீட்டு வரியைச் சரியாகச் செலுத்துவதை உறுதி செய்வதற்காகவே இந்த அதிரடிப் பறிமுதல் நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது என்று அவர் விவரித்தார்.

மேலும், இந்த ஆபரேஷன் தொடர்பான தகவல்களைச் சொத்து உரிமையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி வரும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகள் கவுன்சிலுக்கும் (MPP) அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

எனவே, வரி பாக்கி வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள், தங்களின் வளாகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக தங்களின் நிலுவைத் தொகையைச் செலுத்தி விடுமாறு சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.