இறால் பிடிக்க வலை வீசிய போது முதலையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் படுகாயம்

25 மே 2026, 7:50 AM
இறால் பிடிக்க வலை வீசிய போது முதலையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் படுகாயம்

ஷா ஆலம், மே 25: போர்ட்டிக்சன், கம்போங் தஞ்சோங் ஆகாஸில் உள்ள சுங்கை லிங்கியில் இன்று காலை இறால் பிடிக்க வலை வீசிய முதியவர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால், அவரது பொழுதுபோக்கு சோகத்தில் முடிந்தது.

காலை 5 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், 62 வயதான ஜாபா ஹசான் என்ற அந்த ஆடவரின் இரண்டு கால்களிலும், தொடைப் பகுதி வரையிலும் முதலை கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆற்றுப் படுகையில் இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு, வழக்கம் போல் தனது தந்தை வலை வீசச் சென்றதாகப் பாதிக்கப் பட்டவரின் மகள் நுர்சுஹடா ஜமாலுடின் தெரிவித்தார்.

“வலை வீசுவது அவரது வழக்கமான நடவடிக்கையாகும். வீட்டில் வேலை இல்லாத போது அது தான் அவருக்குப் பொழுதுபோக்கு. சில சமயங்களில் அவர் இறால் பிடிப்பார், சில சமயங்களில் தோட்ட வேலை செய்வார்,” என்று அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது கூற்றுப்படி, ஆற்றுப் படுகையில் வலை வீசும் போது முதலை இருந்ததை அவர் கவனிக்கவில்லை என நம்பப்படுகிறது.

“அவர் நீரின் விளிம்பில் வலை வீசினார். ஒருவேளை அங்கு முதலை இருந்ததை அவர் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அந்த முதலை உடனடியாக அவரைத் தாக்கியுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தனது தந்தை அந்த விலங்குடன் போராடி, பின்னர் அங்கிருந்து தப்பித்து உயிர் பிழைத்ததாக நுர்சுஹடா கூறினார்.

காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கப்படுவதற்கு முன்பு, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குத் தாமே மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.

ஜாபா தற்போது போர்ட்டிக்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் நிலைமை சீராக இருப்பதாகவும், எனினும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் மற்றொரு ஆடவர் வலை வீசும் போது முதலையால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதே பகுதியில் நடந்த இரண்டாவது தாக்குதல் இது என நம்பப்படுவதாக நுர்சுஹடா குறிப்பிட்டார்.

"கடந்த வாரம் அதே பகுதியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அதில் வலை வீசியவரின் கையில் காயம் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து மேலதிக நடவடிக்கைக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறைக்கு (பெர்ஹிலிட்டான்) தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகக் கம்போங் தஞ்சோங் ஆகாஸ் கிராமத் தலைவர் ஹைரி டஹ்லான் கூறினார்.

சுங்கை லிங்கி பகுதியில் முதலைகளின் நடமாட்டம் இருப்பது தெரிந்ததே என்றும், இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, கிராமவாசிகள் தற்போதைக்கு ஆற்றுப்படுகையில் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.