சுங்கை பட்டாணி, மே 22: இங்குள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் நேற்றிரவு எக்ஸ்போ (கண்காட்சி) தளத்தில் வியாபாரி ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமான ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு ஆடவர்களும் முறையே 20 மற்றும் 40 வயதுடையவர்கள் என்றும், இச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும் கோல மூடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
விசாரணை சுமூகமாக நடைபெற ஏதுவாக, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வணிக நடவடிக்கைகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
"சம்பவ இடத்தில் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம், எனவே அனைத்து வியாபாரிகளையும் தற்காலிகமாக வியாபாரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்... விசாரணைகள் முடிவடைந்ததும், இந்த நிகழ்வைத் தொடர மீண்டும் ஏற்பாட்டாளர்களிடம் அப்பகுதி ஒப்படைக்கப்படும்," என்று அவர் இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வெடித்த ஹீலியம் எரிவாயு சிலிண்டரின் உரிமையாளரைப் போலீசார் தற்போது அடையாளம் கண்டு வருவதாக ஹன்யான் குறிப்பிட்டார்.
"மேலும் சில பார்வையாளர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் காயங்கள் சிறிய அளவில் இருந்ததால் அவர்கள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியிருக்கலாம். எனவே, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து விசாரணையை மேற்கொள்ள எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
மேலும் இது குறித்துக் கூறுகையில், ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அதன் உடைந்த பாகங்கள் 100 மீட்டர் தூரம் வரை சிதறி சிலரைத் தாக்கியதாக அவர் விவரித்தார்.
"சிலிண்டர் இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தூரம் வரை சிதறிய பாகங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு ஆடவரைத் தாக்கியுள்ளது. அதன் காரணமாக, அந்த வியாபாரியின் வலது கை மற்றும் வலது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது," என்றார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 304 A-ன் கீழ் இந்த வழக்கு திடீர் மரணமாக விசாரிக்கப்பட்டு வருவதாக ஹன்யான் தெரிவித்தார்.
முன்னதாக, சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவரும், மீட்புப் பணித் தளபதியுமான சித்தி நோராஃபிசா முகம்மட் நோ கூறுகையில், நேற்றிரவு 7.52 மணிக்கு NG 999 அவசர அமைப்பு மூலம் தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்டார்.
வியாபார நோக்கத்திற்காகக் குழந்தைகளின் பலூன்களை நிரப்பப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஹீலியம் எரிவாயு சிலிண்டரே இந்த வெடிப்பிற்குக் காரணம் என நம்பப் படுவதாக அவர் கூறினார்.
"அஸ்மி அகமட் என அடையாளம் காணப்பட்ட 42 வயதுடைய ஆடவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் 15 வயது சிறுவன் உட்பட மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
"36 வயதுடைய நபர் முதுகில் காயமடைந்துள்ளார், 49 வயதுடைய மற்றொரு நபர் வயிற்றில் காயமடைந்துள்ளார். காயமடைந்த அந்த 15 வயது சிறுவனைச் சம்பவத்திற்குப் பிறகு கண்டுபிடிக்க முடியாததால், அவனுக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: விசாரணைக்கு உதவ இரு ஆடவர்கள் கைது
22 மே 2026, 5:27 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Boy dies after fall from seventh floor of Kajang apartment
Kathiravan Manoharan, Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்
Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
வீட்டின் பின்புற சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுமியை போலீசார் மீட்டனர்
Pakiya
8 ஜூன் 2026

national
அரிவாள்களுடன் வந்த இருவர் கொள்ளையடித்ததில் இளைஞர் காயம்
Pakiya
2 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



