பினாங்குக்குள் 1.9 மில்லியன் வாகனங்கள் நுழையும் என எதிர்பார்ப்பு, போக்குவரத்து நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப் படுத்துகிறது

22 மே 2026, 4:56 AM
பினாங்குக்குள் 1.9 மில்லியன் வாகனங்கள் நுழையும் என எதிர்பார்ப்பு, போக்குவரத்து நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப் படுத்துகிறது

ஜோர்ஜ் டவுன்: வரும் மே 27 முதல் ஜூன் 2 வரையிலான நீண்ட விடுமுறை மற்றும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, பினாங்கு மாநிலத்திற்குள் சுமார் 1.9 மில்லியன் வாகனங்கள் நுழையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதனையடுத்து, மாநிலம் முழுவதும் போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை பினாங்கு காவல்துறை தீவிரப்படுத்தும் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் கூறினார்.

ஹஜ் பெருநாள், விசாக தினம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்ட விடுமுறைக் காலத்தில், பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதாலும், சுற்றுலா மேற்கொள்வதால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாக அவர் தெரிவித்தார்.

"பினாங்கு நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இது ஒரு முக்கிய பயண வழித் தடமாகவும் இருப்பதால், விடுமுறைக் காலத்தில் சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்."

"போக்குவரத்து சீராக இயங்குவதையும், சாலைப் பயனர்களின் பாதுகாப்பு உகந்த நிலையில் இருப்பதையும் உறுதிசெய்ய, காவல்துறை அதன் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு (JSPT) மூலம் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்," என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்து அபாயங்களைக் குறைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முழுமையான அமலாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் 'Pre-Emptive Services and Total Enforcement' என்ற கொள்கையை காவல்துறை பின்பற்றும் என அஸிஸி கூறினார்.

பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்கள் ('blackspot') மற்றும் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

"அதுமட்டுமின்றி, செபராங் பிறை உத்தாராவில் உள்ள ஜாலான் தெலுக் ஆயர் தாவார்-ஜாலான் பாகான் லுவார், செபராங் பிறை தெங்காவில் உள்ள ஜாலான் பெரூசாஹான் பிறை-ஜாலான் கூலிம், செபராங் பிறை செலாத்தானில் உள்ள ஜாலான் பெசார் சிம்பாங் எம்பாட் மற்றும் துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை போன்ற அதிக மரண விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளிலும் கவனம் செலுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

பினாங்கு போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 145 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இந்த நடவடிக்கையில் நேரடியாகப் ஈடுபடுவார்கள். இவர்களுடன் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை (JPJKK), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), உள்ளூராட்சி மன்றங்கள் (PBT) மற்றும் PLUS நிறுவனமும் இணைந்து செயல்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேக வரம்பை மீறுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி யைப் பயன்படுத்துதல், அவசர பாதையைப் பயன்படுத்துதல், சிகப்பு விளக்கை மதிக்காமல் செல்லுதல், வரிசையை மீறி முந்திச் செல்லுதல் மற்றும் இரட்டைக் கோடுகளைத் தாண்டிச் செல்லுதல் ஆகிய ஆறு முக்கிய குற்றங்களுக்கு எதிராக உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஸிஸி எச்சரித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.