ஷா ஆலாம், மார்ச் 19: அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கடலோரப் போர்க்கப்பல்கள் (LCS) பினாங்குக்கு வருகை தந்தது, தங்களின் அடுத்த பயணத்தைத் தொடர்வதற்கு முன்னர் தளவாடங்களுக்கான ஒரு தற்காலிக நிறுத்தம் ('port of call') மட்டுமே ஆகும்.
தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறுகையில், USS சாண்டா பார்பரா (LCS 32) மற்றும் USS துல்சா (LCS 16) ஆகிய கப்பல்கள் கடந்த மார்ச் 14 முதல் 16 வரை பினாங்கில் உள்ள வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையத்தில் (NBCT) நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிறுத்தத்தின் நோக்கம், கப்பல்களுக்குத் தேவையான விநியோகப் பொருட்களை நிரப்புதல், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் கப்பல் சிப்பந்திகளுக்கு ஓய்வளித்தல் போன்றவையே ஆகும் என்று அவர் கூறினார்.
"மலேசிய துறைமுகங்களில் வெளிநாட்டு கடற்படை கப்பல்கள் தற்காலிகமாக நிறுத்துவது என்பது அனைத்துலக தற்காப்பு உறவுகளிலும், கடல் பயணங்களிலும் ஒரு வழக்கமான நடைமுறையாகும். இது நம்பிக்கையை வலுப்படுத்தும் தற்காப்பு இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்" என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
விநியோகப் பொருட்களை நிரப்புதல், சிறிய அளவிலான பராமரிப்புப் பணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களுக்கு ஓய்வு அளித்தல் போன்ற தேவைகளை நிறைவேற்றவே இந்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
ஒவ்வொரு வெளிநாட்டு கடற்படை கப்பலின் வருகையும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் நடைபெறுவதோடு, மலேசிய அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புகளின் ஒரு பகுதியாக, நட்பு நாடுகளின் கப்பல்கள் மலேசியாவில் அவ்வப்போது 'port of call' நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம் என்றும் முகமது காலிட் குறிப்பிட்டார்.
2025-ஆம் ஆண்டு முழுவதும், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 75 வெளிநாட்டு கடற்படை கப்பல்கள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளன.
இந்த வருகைகள், தற்காப்பு வெள்ளையறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பிராந்திய ஸ்திரத்தன்மையையும் உலகளாவிய பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மலேசியாவின் பங்கை பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கடலோரப் போர்க்கப்பல்கள் (LCS) பினாங்குக்கு வருகை
19 மார்ச் 2026, 8:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




