உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு ஏற்ப சிலாங்கூர் தொழில்துறையினர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் - மந்திரி புசார்

20 மே 2026, 6:17 AM
உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு ஏற்ப சிலாங்கூர் தொழில்துறையினர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் - மந்திரி புசார்

ஷா ஆலம், மே 20 – நாளுக்கு நாள் மிக வேகமாக மாறிவரும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப, சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தொழில் துறையினர் தொடர்ந்து தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய தொழில் துறையானது டிஜிட்டல் மயம், சுற்றுச்சூழல் நெறிமுறைகள், உலகளாவிய போட்டி மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளின் மாற்றங்கள் போன்ற பலதரப்பட்ட சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சிக்கலான மற்றும் போட்டி நிறைந்த பொருளாதாரச் சூழலில், இனிமேலும் பாரம்பரிய முறைகளை மட்டுமே நம்பி நாம் நீடிக்க முடியாது என்று குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, எதிர்காலப் பொருளாதாரத்தை எதிர்கொள்ளும் வகையில் நமது தொழில் துறைகளையும் நிறுவனங்களையும் நாம் தொடர்ந்து தயார்படுத்தி, புதிய உத்திகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டு மையத்தின் (SHRDC) ‘சினர்ஜி’ (SINERGI) திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சிறப்புமிக்க நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா மற்றும் மாநில புதுமை கலாச்சார விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (KDNK) 26.2 விழுக்காடு அதாவது 432.1 பில்லியன் ரிங்கிட்டைப் பங்களித்து, நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரப் பங்களிப்பாளராக விளங்கும் சிலாங்கூர் மாநிலம், நாட்டின் முதன்மை முதலீட்டுத் தலமாகவும் பொருளாதார நுழைவாயிலாகவும் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அமிருடின் மேலும் தெரிவித்தார்.

வலுவான தொழில் துறை கூட்டணிகள் மற்றும் வியூக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், எதிர்கால சவால்களைத் தாங்கி நிற்கும் ஒரு மீள்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க மாநில அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.